search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    314 எம்.பி.க்கள் ஆதரவுடன் நம்பிக்கையில்லா தீர்மானத்தை முறியடிக்க பா.ஜ.க. வியூகம்?
    X

    314 எம்.பி.க்கள் ஆதரவுடன் நம்பிக்கையில்லா தீர்மானத்தை முறியடிக்க பா.ஜ.க. வியூகம்?

    மத்தியில் ஆளும் தே.ஜ.கூ. ஆட்சிக்கு எதிராக பாராளுமன்றத்தில் கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை 314 எம்.பி.க்கள் ஆதரவுடன் முறியடிக்க பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது. #noconfidencemotion #BJPhopes #314MPssupport
    புதுடெல்லி:

    பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரின் முதல் நாளான இன்று, மத்திய அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்காக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் சபாநாயகர் சுமித்ரா மகாஜனிடம் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.  தெலுங்குதேசம் சார்பிலும் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.

    இதனை சபாநாயகர் ஏற்றுக்கொண்டு அனுமதி அளித்துள்ளார். இந்த மசோதா மீதான விவாதம் வரும் 20-ம் தேதி (வெள்ளிகிழமை) காலை 11 மணிக்கு நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அப்போது மத்திய அரசு நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

    இந்நிலையில், நம்பிக்கையில்லா தீர்மானத்தை 314 எம்.பி.க்கள் ஆதரவுடன்  முறியடிக்க பா.ஜ.க. வியூகம் வகுத்துள்ளது.

    535 உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்ற மக்களவையில் தற்போதைய நிலவரப்படி பா.ஜ.க. (சபாநாயகர் சுமித்ரா மகாஜன் நீங்கலாக) - 274 உறுப்பினர்கள், சிவசேனா -18, லோக் ஜனசக்தி-6, சிரோன்மணி அகாலிதளம்-3 என மொத்தம 313 உறுப்பினர்கள் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ளனர்.

    காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் 63 உறுப்பினர்களும், அ.தி.மு.க.வில் 37 உறுப்பினர்களும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் 34 உறுப்பினர்களும், பிஜு ஜனதா தளம் கட்சியில் 20 உறுப்பினர்களும், தெலுங்கு தேசம் கட்சியில் 16 உறுப்பினர்களும், தெலுங்கானா ராஷ்டரிய சமிதி கட்சியில் 11 உறுப்பினர்களும் உள்ளனர்.

    ஒட்டுமொத்தமாக, பாராளுமன்ற மக்களவையில் ஆளும்கட்சியின் பலம் 313 ஆகவும், எதிர்க்கட்சிகளின் பலம் 222 ஆகவும் உள்ளது. பாராளுமன்றத்தில் எந்த மசோதா அல்லது தீர்மானம் நிறைவேறவும் சரிபாதி பலமான 268 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.

    ஆட்சிக்கு எதிரான தெலுங்கு தேசம் கட்சி முன்வைத்துள்ள தீர்மானத்துக்கு ஆதரவு அளிக்கப்போவதாக காங்கிரஸ், இடதுசாரி இயக்கங்கள் மற்றும் திரினாமுல் காங்கிரஸ் ஆகியவை அறிவித்துள்ளன. அ.தி.மு.க.,  சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் நடுநிலை வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், வரும் வெள்ளிக்கிழமை பகல் முழுவதும் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம் நடைபெற்று, அன்று மாலை வாக்கெடுப்பு நடைபெறுகிறது. இதில் மக்களவை சபாநாயகர் வாக்களிக்க முடியாது.

    இந்த வாக்கெடுப்பில் தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் கருத்து வேறுபாடுள்ள கட்சி தலைவர்களுடன் கலந்துபேசி 314 உறுப்பினர்கள் ஆதரவுடன் நம்பிக்கையில்லா தீர்மானத்தை முறியடிக்க பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது.

    பா.ம.க. எம்.பி. அன்புமணி ராமதாஸ், ஸ்வாபிமானி பாக்‌ஷா எம்.பி. ராஜு ஷெட்டி ஆகியோரின் ஆதரவைபெற பா.ஜ.க. மேலிடம் முயற்சித்து வருவதாக தெரிகிறது.

    இதுதொடர்பாக கருத்து தெரிவித்த பாராளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி அனந்த் குமார், பாராளுமன்றத்தில் பரிபூரணமான மெஜாராட்டி இருப்பதுடன், 21 மாநிலங்களில் ஆட்சி நடத்தும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக இதுபோன்றதொரு தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் கொண்டு வருவது விசித்திரமாக உள்ளது.

    எங்கள் கூட்டணிக்கு வெளியில் இருக்கும் உறுப்பினர்கள் எங்களுக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள். 314 உறுப்பினர்களின் ஆதரவுடன் இந்த தீர்மானத்தை நாங்கள் முறியடிப்போம் என குறிப்பிட்டுள்ளார்.#noconfidencemotion #BJPhopes #314MPssupport
    Next Story
    ×