search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    6 நாட்களில் 34 மணி நேரம் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதி - பக்தர்களிடம் கருத்து கேட்கிறது திருப்பதி தேவஸ்தானம்
    X

    6 நாட்களில் 34 மணி நேரம் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதி - பக்தர்களிடம் கருத்து கேட்கிறது திருப்பதி தேவஸ்தானம்

    திருப்பதியில் கும்பாபிஷேக நாட்களில் சாமி தரிசனம் செய்வதற்காக கோவிலுக்குள் அனுமதிப்பது தொடர்பாக பக்தர்கள் தங்கள் ஆலோசனைகளை தெரிவிக்க தேவஸ்தானம் அறிவுறுத்தி உள்ளது. #TirupatiTemple
    திருமலை:

    திருப்பதியில் ஆகஸ்ட் மாதம் 12-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

    கும்பாபிஷேகத்திற்கான அங்குரார்ப்பணம் 11-ந்தேதி மாலை நடைபெறுகிறது. பல்வேறு காரணங்களால் கும்பாபிஷேக நாட்களில் பக்தர்களை தரிசனத்துக்கு அனுமதிக்க முடியாது என்று தேவஸ்தானம் அறிவித்தது.

    தேவஸ்தானத்தின் முடிவுக்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் எழுந்தன. இந்த நிலையில் தேவஸ்தான நிர்வாகத்துக்கு ஆலோசனை வழங்கி ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தேவஸ்தான நிர்வாக முடிவை மறுசீலனை செய்து கும்பாபிஷேக நாட்களில் குறைந்த எண்ணிக்கையிலான பக்தர்களையாவது தரிசனத்துக்கு அனுமதிக்க வேண்டும் என்று கூறினார்.

    இதையடுத்து தேவஸ்தான நிர்வாக அதிகாரி அனில்குமார் சிங்கால் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கோவில்களில் நடைபெறும் கும்பாபிஷேகத்தின் போது பக்தர்கள் பெருமளவில் வந்து யாகசாலை பூஜையை கண்டு தரிசிப்பது வழக்கம். சாதாரண கோவில்களில் நடைபெறும் போதே லட்சக்கணக்கான எண்ணிக்கையில் பக்தர்கள் கூடுவார்கள்.

    எனவே ஏழுமலையான் கோவில் கும்பாபிஷேக நாட்களில் ஏராளமான எண்ணிக்கையில் பக்தர்கள் வருகை இருக்கும் என்று கருதினோம். கும்பாபிஷேக நாட்களில் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான பக்தர்களுக்கு மட்டுமே தரிசன வசதியை ஏற்படுத்தி கொடுக்க முடியும் என்பதாலும், சாமி தரிசன வாய்ப்பு கிடைக்காமல் அதிக பக்தர்கள் மனவேதனைக்கு உட்படுவார்கள் என்பதாலும் கும்பாபிஷேக நாட்களில் பக்தர்களை கோவிலுக்குள் அனுமதிக்க இயலாது என்று கூறினோம்.

    ஆனால் சமூக வலைத்தளங்களில் தேவஸ்தான நிர்வாகத்தின் முடிவுக்கு பின்னால் இருக்கும் உண்மை மறைக்கப்பட்டு வேறுவிதமான வி‌ஷ பிரசாரம் நடைபெற்று வருகிறது.

    இந்த வி‌ஷயத்தில் நாங்கள் நினைத்ததை சாதித்தே தீருவோம் என்று உறுதியாக இருக்க வேண்டிய அவசியம் தேவஸ்தான நிர்வாகத்துக்கு கிடையாது.

    எனவே கும்பாபிஷேக நாட்களில் சாமி தரிசனம் செய்வதற்காக கோவிலுக்குள் அனுமதிப்பது பற்றிய தகவல் கருத்துக்கள் ஆலோசனைகள் ஆகியவற்றை இம்மாதம் 23-ந்தேதிக்குள் தேவஸ்தான நிர்வாகத்துக்கு பக்தர்கள் அனுப்பி வைக்க கேட்டுக் கொள்கிறேன்.

    பக்தர்கள் வழங்கும் ஆலோசனைகள், கருத்துகள் குறித்து 24-ந்தேதி திருப்பதி மலையில் நடைபெற இருக்கும் அறங்காவலர் குழு ஆலோசனை கூட்டத்தில் பரிசீலனைக்கு உட்படுத்தப்படும்.

    அதன் பின்னர் கும்பாபிஷேக நாட்களில் பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதி பற்றிய அறிவிப்பு வெளியிடப்படும். அபிஷேகம் நடைபெற இருக்கும் 6 நாட்களிலும் சேர்த்து அதிகபட்சம் 34 மணி நேரம் மட்டுமே பக்தர்களை கோவிலுக்குள் அனுமதிக்க முடியும்.

    எனவே நிலைமையை கருத்தில் கொண்டு பக்தர்கள் தங்கள் ஆலோசனைகளை தேவஸ்தானத்துக்கு தெரிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #TirupatiTemple
    Next Story
    ×