search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பதியில் விதிக்கப்பட்ட 8 நாள் தரிசன தடை நீக்க சந்திரபாபு நாயுடு அறிவுறுத்தல்
    X

    திருப்பதியில் விதிக்கப்பட்ட 8 நாள் தரிசன தடை நீக்க சந்திரபாபு நாயுடு அறிவுறுத்தல்

    திருப்பதி கோவிலில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு விதிக்கப்பட்ட 8 நாள் தரிசன தடையை நீக்கி குறிப்பிட்ட பக்தர்களை அனுமதிக்கும்படி முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார். #ChandrababuNaidu #Tirupatitemple
    திருமலை:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு அடுத்த மாதம் 16-ந் தேதி மகா கும்பாபிஷேக விழா நடக்கிறது. இதையொட்டி, ஆகஸ்ட் 11-ந் தேதி முதல் அங்குரார்ப்பணம், பாலாலய பிரதிஷ்டை, மகா சாந்தி ஹோமம், அஷ்டபந்தனம் நடக்கிறது.

    கும்பாபிஷேக விழா நாட்களில் கோவிலில் 24 மணி நேரமும் வைதீக காரியங்கள், ஹோமங்கள் உள்ளிட்டவற்றிற்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்படும். இதனால் பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் ஏழுமலையானை தரிசனம் செய்ய முடியாது.

    எனவே, ஆகஸ்ட் 9-ந் தேதி மாலை 6 மணி முதல் 17-ந் தேதி காலை 6 மணி வரை பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தான அறங்காவலர் குழுத்தலைவர் புட்டா சுதாகர் யாதவ் தெரிவித்தார்.

    அதன்படி, ஆகஸ்ட் 9-ந் தேதி மாலை 6 மணிக்கு மேல் பக்தர்கள் தரிசன வரிசையில் செல்ல அனுமதி ரத்து செய்யப்பட்டிருந்தது. மகா கும்பாபிஷேகம் நிறைவு பெற்று ஆகஸ்ட் 17-ந் தேதி காலை 6 மணிக்கு பிறகு தான் பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது.

    இந்த 8 நாட்களில் வி.ஐ.பி. பிரேக் உள்பட அனைத்து தரிசனங்களையும் தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. 8 நாட்களிலும் செப்பனிடும் பணிகள் நடைபெறுகின்றன. தேவஸ்தான ஊழியர்கள் மற்றும் வேத பண்டிதர்கள், செப்பனிடும் ஊழியர்கள் தவிர யாரும் கோவிலுக்குள் செல்ல முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டது.

    தேவஸ்தானத்தின் இந்த நடவடிக்கையால் பக்தர்கள் அதிருப்தியடைந்து, கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இந்த நிலையில், கும்பாபிஷேக விழா நாட்களில் தினமும் 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும் என ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபுநாயுடு தேவஸ்தானத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.



    கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கும்பாபிஷேக விழாவின்போது, 25 ஆயிரம் முதல் 30 வரை பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போதும் அதே நடைமுறையை பின்பற்றி டோக்கன் வழங்கி தினமும் 25 ஆயிரம் பக்தர்களை கும்பாபிஷேக நாட்களில் அனுமதிக்க வேண்டும்.

    8 நாட்களுக்கு பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதித்ததை திரும்ப பெற வேண்டும் என்று தேவஸ்தானத்திற்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவில் அறிவுறுத்தியுள்ளார். #ChandrababuNaidu #Tirupatitemple

    Next Story
    ×