search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தலித், சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் அதிகரிப்பு- சர்வதேச மனித உரிமை ஆணையம் தகவல்
    X

    தலித், சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் அதிகரிப்பு- சர்வதேச மனித உரிமை ஆணையம் தகவல்

    வெறுக்கத்தக்க வகையில் தலித், சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் தாக்குதல் அதிகரித்து உள்ளதாக சர்வதேச மனித உரிமை ஆணையமான ஆம்னெஸ்டி இண்டர்நே‌ஷனல் கூறுகிறது. #AmnestyInternational
    புதுடெல்லி:

    நாடு முழுவதும் தலித்துகள், பழங்குடியினர், சிறுபான்மை மக்கள் போன்றவர்கள் மீது பரவலாக தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

    அதில், சில தாக்குதல்கள் அவர்களை கடுமையாக அவமதிக்கும் வகையிலும், கீழ்த்தரமாக நடத்தும் வகையிலும் இருக்கிறது. இதை வெறுக்கத்தக்க தாக்குதல் என்று அழைக்கிறார்கள்.

    இந்த வகை தாக்குதல்கள் நாடு முழுவதும் அதிகரித்து வருவதாக சர்வதேச மனித உரிமை அமைப்பான ஆம்னெஸ்டி இண்டர்நே‌ஷனல் கூறி இருக்கிறது.

    2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் உத்தரபிரதேச மாநிலம் தாத்ரியில் மாட்டு இறைச்சி வைத்திருந்ததாக கூறி முகமது அக்லக் என்பவர் கொல்லப்பட்டார்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து இது போன்ற வெறுக்கத்தக்க தாக்குதல்கள் எந்த அளவுக்கு நடைபெறுகிறது என்பது பற்றி ஆம்னெஸ்டி இண்டர்நே‌ஷனல் கணக்கெடுத்தது. அதில், 2015 செப்டம்பருக்கு பிறகு இதுவரை 603 வெறுக்கத்தக்க குற்றங்கள் நடந்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.

    இந்த ஆண்டில் முதல் 6 மாதத்தில் மட்டும் 100 குற்றங்கள் நடந்துள்ளன. அதில், உத்தரபிரதேசத்தில் தான் அதிக குற்றங்கள் நடந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    அங்கு மட்டும் 18 குற்றங்கள் நடந்துள்ளன. குஜராத்தில் 13 குற்றங்களும், ராஜஸ்தானில் 8 குற்றங்களும், தமிழ்நாடு, பீகாரில் தலா 7 குற்றங்களும் நடந்துள்ளன.

    கடந்த ஜூன் மாதம் உத்தரபிரதேச மாநிலம் ஹபூரில் முகமது காசிம் என்பவர் மாட்டு இறைச்சி வைத்திருந்ததாக கூறி கும்பலால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

    கடந்த 6 மாதத்தில் தலித்துகளுக்கு எதிராக 67 குற்றங்களும், முஸ்லிம்களுக்கு 22 குற்றங்களும் நடந்துள்ளன.

    குறிப்பாக உத்தரபிரதேச மாநிலத்தின் மேற்கு பகுதிதான் இத்தகைய குற்றங்கள் நடப்பதன் மைய பகுதியாக இருப்பதாகவும் ஆம்னெஸ்டி இண்டர் நே‌ஷனல் கூறி இருக்கிறது.

    அதில், குறிப்பாக மீரட், முசாப்பர் நகர், சகரான் பூர், புலந்த்சாகர் ஆகிய பகுதிகளில் நிலைமை மோசமாக இருப்பதாகவும் கூறப்பட்டு இருக்கிறது.

    கடந்த ஏப்ரல் மாதம் 2-ந் தேதி மீரட்டில் உள்ள சொகாப்பூர் கிராமத்தில் தலித் இளைஞர் உயர் ஜாதியினரால் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் நடந்தது.

    பாக்பட் என்ற இடத்தில் குர்ஜார் சமூக பெண்ணை தலித் இளைஞர் ஒருவர் காதலித்ததால் அந்த இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்டார்.

    புலந்த்சாகர் என்ற இடத்தில் வாலிபர் ஒருவர் வேறு ஜாதி பெண்ணை திருமணம் செய்ததால் அந்த வாலிபரின் தந்தையை தனது எச்சிலை துப்பி பின்னர் நக்க வைத்து உள்ளூர் பஞ்சாயத்தார் அவமதித்த சம்பவம் நடந்தது.

    இதுபோல் நடந்த பல குற்றங்களையும் ஆம்னெஸ்டி இண்டர்நே‌ஷனல் சுட்டிக்காட்டி தனது இணைய தளத்தில் தகவல்களை வெளியிட்டுள்ளது. #AmnestyInternational
    Next Story
    ×