search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உத்தரபிரதேசத்தில் 350 போலீசார் பாதுகாப்புடன் சாரட்டில் சென்ற தலித் மணமகன்
    X

    உத்தரபிரதேசத்தில் 350 போலீசார் பாதுகாப்புடன் சாரட்டில் சென்ற தலித் மணமகன்

    உத்தரபிரதேச மாநிலத்தில் உயர் சாதியினரின் மிரட்டலை மீறி 350 போலீசார் பாதுகாப்புடன் தலித் மணமகன் சாரட்டில் சென்று திருமணம் செய்து கொண்டார்.
    லக்னோ:

    உத்தரபிரதேசம் மாநிலத்தில் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களை உயர் சாதி இனத்தவர்கள் மிகவும் மோசமாக நடத்துவது இன்னமும் நடந்தபடிதான் உள்ளது.

    தலித் மக்களை கொடுமைப்படுத்துபவர்களைத் தண்டிக்க கடும் சட்டங்கள் உள்ள போதிலும், கிராமங்களில் ஆங்காங்கே அத்துமீறல்கள் நடக்கிறது. குறிப்பாக தங்களைப் போல ஆடம்பரமாக தலித் மக்கள் வாழ உயர் சாதியினர் அனுமதிக்காத நிலை நிலவுகிறது.

    உயர் சாதியினரின் இத்தகைய அடக்கு முறையை தலித் வாலிபர் ஒருவர் கடுமையாக போராடி உடைத்துள்ளார். இது பற்றிய விவரம் வருமாறு:-

    உத்தரபிரதேச மாநிலம் கஸ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள நிசாம்பூர் கிராமத்தில் தலித் மக்களும், தாக்கூர் என்ற உயர் சாதி மக்களும் வசித்து வருகிறார்கள். இந்த கிராமத்தை சேர்ந்த தலித் பெண் ஷீதல்.

    இவருக்கும் அருகில் உள்ள ஹத்ரஸ் மாவட்டத்தை சேர்ந்த சஞ்சய்ஜாதவ் (27) என் பவருக்கும் 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடத்த நிச்சயம் செய்யப்பட்டது.

    ஏப்ரல் மாதம் 20-ந்தேதி சஞ்சய்-ஷிதல் திருமணத்தை நடத்த முடிவு செய்யப்பட்டது. மணமகன் சஞ்சய், நிசாம்பூர் கிராமத்துக்குள் வரும்போது அலங்கரிக்கப்பட்ட குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் வருவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இதை அறிந்ததும் நிசாம்பூர் கிராம தாக்கூர் இனத்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    தலித் இனத்தவர்கள் தங்கள் ஊருக்குள் சாரட் வண்டியில் வரக்கூடாது என்றனர். பஞ்சாயத்தை கூட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இந்த தடையை கண்டு மணமகன் சஞ்சய் பயப்படவில்லை. மனம் கலங்கி பின்வாங்கவில்லை.

    உயர்சாதி மக்களின் தடையை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு, ‘‘சஞ்சய்-ஷீதல் திருமணத்துக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும். மணமகன் சஞ்சய் சாரட் வண்டியில் செல்ல உதவ வேண்டும்’’ என்று உத்தரவிட்டது. இதனால் கஸ்கஞ்ச், ஹதரஸ் இரு மாவட்டங்களிலும் பரபரப்பு ஏற்பட்டது.

    நேற்று மாலை மணமகன் சஞ்சய் தனது ஊரில் இருந்து சாரட் வண்டியில் புறப்பட்டு வந்தார். கஸ்கஞ்ச் மாவட்ட எல்லையில் போலீசார் வரவேற்று அவருக்கு பாதுகாப்பு கொடுத்தனர். அவருக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பை நேற்று காலை 2 மாஜிஸ்திரேட்டுகள், ஒரு தாசில்தார் நேரில் வந்து ஆய்வு செய்து உத்தரவு பிறப்பித்துள்ளனர்.


    மாவட்ட எல்லையில் இருந்து நிசாம்பூர் கிராமம் வரை சஞ்சய் குதிரை வண்டியில் அமர்ந்து கம்பீரமாக வந்தார். 6 போலீஸ் நிலையங்களை சேர்ந்த சுமார் 350 போலீசார் அவரது சாரட் வண்டி ஊர்வலத்துக்கு பாதுகாப்பு அளித்தனர். உயர்சாதி மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் சஞ்சய் பாதுகாப்புக்கு கமாண்டோ படை வீரர்கள் நிறுத்தப்பட்டிருந்தனர்.

    மணமகன் சஞ்சய் சாரட் வண்டியில் பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்படுவதை உள்ளூர் டி.வி. சேனல்கள் போட்டி போட்டு நேரடி ஒளிபரப்பு செய்தன. மணமகள் ஷீதல் அந்த காட்சிகளை வீட்டில் அமர்ந்து பார்த்தபடி இருந்தார்.

    சாரட் வண்டி ஊர்வலம் நிசாம்பூர் கிராமத்தை அடைந்ததும் சஞ்சய்-ஷீதல் திருமணம் நடந்தது. சுமார் 350 போலீஸ் பாதுகாப்புடன் நடந்த அவர்களது திருமணத்தை அக்கம் பக்கம் கிராமத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்கள் திரண்டு வந்து பார்த்தனர்.

    நிசாம்பூர் கிராம மக்கள் இதுபற்றி கூறுகையில், இதுவரை இப்படி ஒரு திருமணத்தை பார்த்ததே இல்லை என்றனர். சஞ்சய் செய்த துணிச்சலான புரட்சியால் நிசாம்பூர் கிராமத்தில் சாரட் வண்டியில் வந்து திருமணம் செய்த முதல் தலித் வாலிபர் என்ற சாதனையை சஞ்சய் படைத்துள்ளார். #DalitGroom #Kasganj
    Next Story
    ×