search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரளாவில் கனமழைக்கு 3 பேர் பலி- 8 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
    X

    கேரளாவில் கனமழைக்கு 3 பேர் பலி- 8 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

    கேரளாவில் பெய்து வரும் கனமழைக்கு 3 பேர் பலியாகியுள்ள நிலையில் 8 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. #KeralaRain
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை கடந்த 1½ மாதங்களாக பெய்து வருகிறது. இந்த மாத தொடக்கத்தில் சற்று ஓய்ந்து இருந்த மழை மீண்டும் தீவிரமடைந்துள்ளது.

    கேரள தலைநகரான திருவனந்தபுரம் உள்பட மாநிலம் முழுவதும் இந்த மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மழை காரணமாக சிறுவன் உள்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

    கோழிக்கோடு பகுதியை சேர்ந்த கல்யாணி (வயது 88) என்ற பெண் தனது வீடு அருகே நடந்து சென்றபோது மரக்கிளை முறிந்து விழுந்ததில் அவர் உயிரிழந்தார். கண்ணூர் பகுதியில் ஆட்டோ மீது மரம் விழுந்ததில் அதில் பயணம் செய்த சித்தாரா (20) என்ற பெண்ணும், ஆலப்புழாவில் சாலையில் அறுந்துகிடந்த மின் கம்பியை மிதித்த சுபத்ரா (60) என்பவரும் பரிதாபமாக இறந்தனர்.

    இதேபோல கோழிக்கோடு பகுதியை சேர்ந்த வைஷ்னவ் (16) என்ற சிறுவன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது பலத்த மழை காரணமாக தவறி சாலையில் விழுந்தான். அப்போது அந்த வழியாக வந்த பஸ் மோதியதில் அவன் உயிரிழந்தான்.

    இந்த மழை காரணமாக பல இடங்களில் பெரிய, பெரிய மரங்கள் சாலைகளில் சாய்ந்தன. கோழிக்கோடு புதியங்காடி என்ற இடத்தில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் கணவன், மனைவி பயணம் செய்தனர். மழை காரணமாக வேரோடு சாய்ந்த ராட்சத மரம் அந்த கார் மீது விழுந்தது. இதனால் காரின் முன் பகுதி நசுங்கியதால் காருக்குள் அவர்கள் சிக்கிக்கொண்டனர். காரில் பயணம் செய்த பெண்ணின் கால் நசுங்கிய பகுதியில் மாட்டிக்கொண்டதால் அவரால் வெளியே வரமுடியவில்லை. உடனடியாக தீயணைப்பு படையினர் வரவழைக்கப்பட்டு ஒரு மணிநேர போராட்டத்திற்கு பிறகு அந்த பெண் காரில் இருந்து மீட்கப்பட்டார். அவருக்கு காலில் படுகாயம் ஏற்பட்டு இருந்ததால் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.



    வியாழக்கிழமை வரை கேரளா முழுவதும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் திருவனந்தபுரம், ஆலப்புழா, எர்ணாகுளம், இடுக்கி, பத்தனம்திட்டா, திருச்சூர், கொல்லம், கோட்டயம் ஆகிய 8 மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    கேரள பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற இருந்த தேர்வுகள் வருகிற 21-ந்தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

    திருவனந்தபுரத்தில் உள்ள நெய்யாறு அணை முழு கொள்ளளவை எட்டியதால் அந்த அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.

    முல்லை பெரியாறு, இடுக்கி அணைகளுக்கும் அதிகளவு தண்ணீர் வருவதால் அந்த அணைகளும் வேகமாக நிரம்பி வருகிறது. மேலும் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மரங்கள் மின்கம்பிகளில் விழுந்ததால் மின்தடையும் ஏற்பட்டுள்ளது.

    எர்ணாகுளம் தெற்கு ரெயில்நிலையத்திற்குள் மழை வெள்ளம் புகுந்ததால் தண்டவாளங்கள் தண்ணீரில் மூழ்கின. இதனால் இங்கு ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

    சிறையின்கீழ், கோவளம், விழிஞ்ஞம், கொல்லம் போன்ற இடங்களில் கடல் அதிக சீற்றத்துடன் காணப்படுகிறது. ராட்சத அலைகளும் கரையை நோக்கி சீறிப் பாய்கிறது. இதனால் 3 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளனர். #KeralaRain
    Next Story
    ×