search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போலி இ-மெயில் மூலம் ரூ.5.60 கோடி சுருட்டல் - கத்தார் அரச குடும்பத்தை கலங்க வைத்த இந்தியர்
    X

    போலி இ-மெயில் மூலம் ரூ.5.60 கோடி சுருட்டல் - கத்தார் அரச குடும்பத்தை கலங்க வைத்த இந்தியர்

    கத்தார் அரச குடும்பத்தினர் பெயரில் உள்ள இ-மெயிலை கண்டுபிடித்து போலியாக மெயில் அனுப்பி அந்நாட்டு அரசு நிறுவனத்திடம் இருந்து ரூ.5.60 கோடி சுருட்டிய கேரளாவை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
    திருவனந்தபுரம்:

    கேரளாவை சேர்ந்த சுனில் மேனன் என்பவர் கத்தாரில் வேலை செய்துவிட்டு சில ஆண்டுகளுக்கு முன்னர் சொந்த ஊர் திரும்பினார். பின்னர், ஆன்லைனில் கலைநயமிக்க பொருட்களை விற்பனை செய்து வருகிறார். 

    இந்நிலையில்,  கத்தார் அரச குடும்பத்தினர் பெயரில் உள்ள இ-மெயிலை கண்டுபிடித்து போலியாக மெயில் அனுப்பி அந்நாட்டு அரசு நிறுவனத்திடம் இருந்து ரூ.5.60 கோடி சுருட்டியதாக நேற்று அவர் அம்மாநில போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

    இது தொடர்பாக போலீசார் கூறுகையில், கத்தார் அரச குடும்பத்தினரின் இணையதளத்தில் இருந்து இ-மெயில் ஐடியை கண்டுபிடித்து, அதே போல மெயில் ஐடியை உருவாக்கி, கத்தாரை சேர்ந்த அருங்காட்சியகத்திற்கு மெயில் ஒன்றை அனுப்பியுள்ளார். 

    அதில், தங்களிடம் மன்னரின் புகைப்படம் ஒன்று தங்கத்தால் பிரேம் செய்யப்பட்டு இருப்பதாகவும், முன்பணம் செலுத்தி அதை பெற்றுக்கொள்ளுமாறு ஒரு வங்கிக்கணக்கையும் அதில் இணைத்து சுனில் மேனன் அருங்காட்சியகத்திற்கு மெயில் அனுப்பியுள்ளார்.

    இந்திய மதிப்பில் ரூ.5.60 கோடியை அருங்காட்சியத்தின் நிர்வாகம் குறிப்பிட்ட வங்கிக்கணக்கிற்கு அனுப்பியுள்ளது. ஆனாலும், புகைப்படம் வந்து சேராததால் சந்தேகம் அடைந்து இது தொடர்பாக விசாரித்துள்ளது. இதனை அடுத்து, தாங்கள் ஏமாற்றப்பட்டது தெரியவர, போலீசாரிடம் புகாரளித்துள்ளனர்.

    தங்கள் பெயரில் ஏமாற்று மோசடி நடந்துள்ளது தொடர்பாக அதிர்ச்சியடைந்த அரச குடும்பமும் புகார் அளிக்க, போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் கேரளாவில் இருந்து அந்த மெயில் அனுப்பப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக கேரளா போலீசாருக்கும் அந்நாட்டு அரசு புகாரளித்தது.

    இதனை அடுத்து, சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் தேடுதல் வேட்டை நடத்தியதில் சுனில் மேனன் நேற்று சிக்கினார். அவரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கத்தார் அருங்காட்சியத்திடம் சுருட்டிய பணத்தில் சுனில் மேனன் ஒரு சொகுசு கார் ஒன்று வாங்கியுள்ளார். மேலும், 20 லட்சம் ரூபாயை வட்டிக்கு கடனாக கொடுத்துள்ளார் என போலீசார் தெரிவித்தனர். 
    Next Story
    ×