search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஏ.டி.ஜி.பி. சுதேஷ் குமார்- போலீஸ் டிரைவர் கவாஸ்கர்.
    X
    ஏ.டி.ஜி.பி. சுதேஷ் குமார்- போலீஸ் டிரைவர் கவாஸ்கர்.

    ஏ.டி.ஜி.பி. மகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்- கேரள டி.ஜி.பி. அறிவிப்பு

    டிரைவர் மீதான புகார் பொய் என தெரிய வந்தால் ஏ.டி.ஜி.பி. மகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரள டி.ஜி.பி. அறிவித்துள்ளார்.
    திருவனந்தபுரம்:

    கேரள போலீசில் ஏ.டி.ஜி.பி.யாக பணியாற்றி வருபவர் சுதேஷ்குமார்.

    இவரது கார் டிரைவராக போலீஸ்காரர் கவாஸ்கர் இருந்தார். சில நாட்களுக்கு முன்பு ஏ.டி.ஜி.பி. சுதேஷ் குமாரின் மகள், போலீஸ்காரர் கவாஸ்கரை தாக்கியதாக புகார் கூறப்பட்டது. இதில் படுகாயம் அடைந்த கவாஸ்கர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    டிரைவர் கவாஸ்கர் கொடுத்த புகார் தொடர்பாக ஏ.டி.ஜி.பி.யின் மகள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    இது போல கவாஸ்கர் மீது ஏ.டி.ஜி.பி.யின் மகளும் புகார் கொடுத்தார். அதன் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகிறார்கள்.

    இதற்கிடையே திருவனந்தபுரத்தில் நடந்த போலீஸ் கட்டிட திறப்பு விழாவில் பங்கேற்ற கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் பேசும் போது, போலீசார், போலீஸ் அதிகாரிகளுக்கு அடிமைப்பணி செய்ய நியமிக்கப்படவில்லை. அவர்கள் பொதுமக்களுக்கு சேவை செய்யவே பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.

    போலீசார் அரசியல்வாதிகளுக்கு கூஜா தூக்கவும், எடுபிடி வேலைகள் செய்யவும் கூடாது. இது போன்ற பணிகளை செய்ய போலீசாரை வற்புறுத்தும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

    இந்நிலையில் கேரள டி.ஜி.பி. லோக்நாத்பெக்ரா இப்பிரச்சனை குறித்து கூறியதாவது:-

    போலீஸ்காரரை போலீஸ் ஏ.டி.ஜி.பி. மகள் தாக்கிய விவகாரம் குறித்து குற்றப்பிரிவு ஏ.டி.ஜி.பி. விசாரணை நடத்துவார்.

    போலீஸ்காரர் மீது ஏ.டி.ஜி.பி.யின் மகள் கொடுத்த புகார் குறித்தும் விசாரிக்கப்படும். இதில் உண்மை இல்லை என தெரிய வந்தால் அது குறித்தும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையே கேரளாவில் போலீஸ் அதிகாரிகளுக்கு அடிமைப்பணி செய்யும் போலீசார் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது.

    இது போலீஸ் அதிகாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #IPSOfficerDaughter #PoliceDriverAttacked #Kerala
    Next Story
    ×