search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பம்பை ஆற்றில் பேரிடரா? - சபரிமலை கோவிலில் நடந்த தேவபிரசன்னத்தில் அதிர்ச்சி தகவல்
    X

    பம்பை ஆற்றில் பேரிடரா? - சபரிமலை கோவிலில் நடந்த தேவபிரசன்னத்தில் அதிர்ச்சி தகவல்

    சபரிமலை அய்யப்பன் கோவிலில் தேவபிரசன்னம் எனப்படும் அருள்வாக்கு கேட்கும் நிகழ்ச்சியில் பம்பை ஆற்றில் பேரிடர் ஏற்படலாம் என அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது.
    திருவனந்தபுரம்:

    சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடந்த ஆறாட்டு விழா ஊர்வலத்தின் போது யானை மிரண்டு ஓடிய சம்பவம் அய்யப்ப பக்தர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது அபசகுனமாகவும் கருதப்பட்டது. இதையொட்டி அருள்வாக்கை அறிய சபரிமலை கோவில் சன்னிதானத்தில் தேவ பிரசன்னம் பார்த்து, பரிகார பூஜை நடத்த முடிவு செய்யப்பட்டது.

    தற்போது சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடை திறக்கப்பட்டு ஆனி மாத பூஜை நடந்து வருகிறது. இந்த நிலையில் தேவபிரசன்னம் பார்க்கும் நிகழ்ச்சி கடந்த 3 நாட்களாக நடந்தது. ஜோதிட பண்டிதர் பத்மநாப சர்மா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியின்போது சபரிமலை கோவில் தொடர்பாக சில பரிகாரங்கள் செய்ய வேண்டியது குறித்து தேவபிரசன்னத்தில் கண்டறியப்பட்டது. அது குறித்து ஜோதிடர் பத்மநாப சர்மா கூறியதாவது:-

    தற்போது கோவில் அமைந்துள்ள இடத்தில் எந்த குறைபாடும் இல்லை. சபரிமலை கோவில் விரிவாக்கம், நிலம் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படும். அதற்கு பரிகாரம் காணப்பட வேண்டும்.

    சுவாமி கணபதிக்கு கூடுதல் நெய்வேத்தியம் செய்ய வேண்டும். வேள்வி குண்டத்துக்கு முன் பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள 2-வது கணபதி விக்ரகத்தை தக்க இடத்தில் பிரதிஷ்டை செய்து, பூஜை, அபிஷேகம் செய்ய வேண்டும். கோவிலின் தந்திரி, மேல்சாந்தி ஓய்வெடுக்கும் இடங்களை மாற்ற வேண்டும்.

    கலசாபிஷேகம் கோவில் ஆசார பூஜை அல்ல. அப்படியே செய்வதாக இருந்தால் அதை முறைப்படி நல்ல முறையில் செய்ய வேண்டும். கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் பூசாரிகள், பாதுகாவலர்கள் மற்றும் போலீசாரின் மோசமான நடவடிக்கையால் தோஷம் ஏற்பட்டுள்ளது. அதற்கு உடனடியாக பரிகாரம் காணவேண்டும். பம்பை நதியில் பேரிடர் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் தேவ பிரசன்னத்தில் தெரியவந்துள்ளது. எனவே அதற்குரிய பரிகாரங்களையும் உடனடியாக செய்தாக வேண்டும்.

    இவ்வாறு ஜோதிடர் பத்மநாப சர்மா தெரிவித்தார். 
    Next Story
    ×