search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரளாவில் 15-ந்தேதி வரை கனமழை எச்சரிக்கை
    X

    கேரளாவில் 15-ந்தேதி வரை கனமழை எச்சரிக்கை

    கேரளாவில் வருகிற 15-ந்தேதி வரை கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் அனைத்து துறை அரசு அதிகாரிகளும் 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை முன்கூட்டியே தொடங்கியதால் கடந்த 2 வாரங்களாக மாநிலம் முழுவதும் கன மழை பெய்து வருகிறது.

    கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழையின் போது அதிக அளவு மழை பொழிவு இருக்கும் என்று வானிலை ஆய்வு மையமும் ஏற்கனவே எச்சரித்து இருந்தது. ஒரே நாளில் 7 முதல் 11 சென்டிமீட்டர் வரை மழை பெய்யும் என்றும் சில இடங்களில் 10 முதல் 12 சென்டிமீட்டர் வரை மிக கனத்த மழை பெய்யும் என்றும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற 15-ந்தேதி வரை கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இதுவரை கேரளாவில் மழைக்கு 17 பேர் பலியாகி உள்ளனர். ஏராளமான வீடுகளும் இடிந்து உள்ளன. பல இடங்களில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளது.

    நேற்று கேரளாவில் அதிகபட்சமாக இடுக்கி மாவட்டம் பீர்மேட்டில் 32 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    இதனால் இன்று இடுக்கி, கோட்டயம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. பத்தனம் திட்டா மாவட்டத்தில் ராணி, மல்லப்பள்ளி தாலுகாக்களில் உள்ள பள்ளிக்கூடங்களுக்கும், பாலக்காடு மாவட்டத்தில் அட்டப்பாடி பகுதியில் உள்ள பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.

    இந்த மழை காரணமாக மலங்கரா அணை நிரம்பி விட்டது. இந்த அணையில் இருந்து எந்த நேரத்திலும் உபரி நீர் திறந்து விடப்படலாம் என்ற சூழ்நிலை நிலவுவதால் இந்த அணையின் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் முகியார் அணை, நெய்யாறு போன்ற அணைகளுக்கும் அதிக அளவு தண்ணீர் வருவதால் அந்த பகுதி மக்களையும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும் படி அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

    இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை மலைப்பாதைகளில் பயணம் செய்வதை தவிர்க்குமாறும் சுற்றுலா தலங்களில் உள்ள சுற்றுலாப்பயணிகள் பாதுகாப்பான இடங்களில் இருக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    மலை கிராமங்களில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாலும், காட்டாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதாலும் அனைத்து மாவட்டங்களிலும் தாலுகா வாரியாக 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டு உள்ளது.

    வருகிற 15-ந்தேதி வரை அனைத்து துறை அரசு அதிகாரிகளும் 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். மழை பாதிப்பு தொடர்பாக 1072 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

    மழை காரணமாக 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
    Next Story
    ×