search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    5 மாநிலங்களுக்கு எச்சரிக்கை: கேரளாவில் கனமழைக்கு ஒருவர் பலி
    X

    5 மாநிலங்களுக்கு எச்சரிக்கை: கேரளாவில் கனமழைக்கு ஒருவர் பலி

    தென்மேற்கு பருவமழை தொடர்பாக கேரளா, கர்நாடகா உள்பட 5 மாநிலங்களுக்கு மத்திய நீர்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. #Rain
    திருவனந்தபுரம்:

    தென்மேற்கு பருவமழை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 1-ந்தேதி தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு வழக்கத்தைவிட முன்னதாக கடந்த 29-ந்தேதியே தொடங்கிவிட்டது.

    இதன் காரணமாக கேரளா மற்றும் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கேரளாவில் திருவனந்தபுரம், மலப்புரம், கோழிக்கோடு, கோட்டயம் ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை நீடிக்கிறது. திருவனந்தபுரம் கரமனை ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.

    திருவனந்தபுரம் பகுதியில் பல இடங்களில் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து உள்ளது. இங்கு 48.8 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. கொச்சியில் 51.8 மில்லி மீட்டர் மழையும், கண்ணூரில் 30.2 மில்லி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது. இதனால் கேரளாவில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

    எர்ணாகுளம் மாவட்டம் பெரும்பாவூர் பகுதியில் மழைக்கு ஒரு வாலிபர் பலியாகி உள்ளார். அவர் அந்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற போது மழை காரணமாக மின்கம்பி அறுந்து அவர் மீது விழுந்ததில் உயிரிழந்தார்.

    கேரளாவில் மேலும் 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும், மிக அதிகபட்சமாக சில இடங்களில் 50 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்பு உள்ளதாக கொச்சி வானிலை ஆய்வுமையம் எச்சரித்துள்ளது.

    விழிஞ்சம், சிறையின்கீழ், கோவளம் போன்ற பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் மீனவர்கள் மறு அறிவிப்பு வரும்வரை கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து கேரளாவில் அனைத்து மாவட்ட கலெக்டர்களும் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். தீயணைப்பு, வருவாய்த்துறை உள்பட அனைத்து அரசுத்துறை அதிகாரிகளும் 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளனர்.

    தென்மேற்கு பருவமழை தொடர்பாக மத்திய நீர்வளத்துறை கேரளா, கர்நாடகா, கோவா, மராட்டியம், குஜராத் ஆகிய 5 மாநிலங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில் இந்த மாநிலங்களில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்றும், இதன் காரணமாக பலத்த காற்று வீசும் என்றும் கூறப்பட்டு உள்ளது. மேலும் ஆறுகளில் திடீர் வெள்ளபெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், குறிப்பாக கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் இந்த மழை காரணமாக கடும் பாதிப்பு ஏற்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. #rain
    Next Story
    ×