search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரபேல் போர் விமான பேரத்தில் ஊழல் இல்லை: ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்
    X

    ரபேல் போர் விமான பேரத்தில் ஊழல் இல்லை: ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

    ரபேல் போர் விமான பேரத்தில் ஊழல் நடைபெறவில்லை என்று ராணுவ மந்திரி நிர்மலா சீதா ராமன் திட்டவட்டமாக கூறினார். #NirmalaSitharaman
    புதுடெல்லி:

    ராணுவ அமைச்சகத்தின் 4 ஆண்டுகால சாதனைகள் பற்றி துறைக்கான மந்திரி நிர்மலா சீதாராமன், டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அண்டை நாட்டுடன் (பாகிஸ்தானுடன்) 2003-ம் ஆண்டு ஏற்படுத்திய போர் நிறுத்த உடன்பாட்டை இந்தியா மதித்து நடக்கிறது. அதே நேரத்தில், அத்துமீறி தாக்குதல் நடத்தப்படுகிறபோது, அதற்கு பதிலடி கொடுக்கிற உரிமை நமது ராணுவத்துக்கு உண்டு.

    பயங்கரவாதமும், பேச்சுவார்த்தையும் ஒரே நேரத்தில் நடைபெற முடியாது.

    ரம்ஜானையொட்டி பிரதமர் மோடி அறிவித்த போர் நிறுத்தம் வெற்றியா என்று கேட்கிறீர்கள். அது வெற்றியா, இல்லையா என்று பார்ப்பது ராணுவ அமைச்சகத்தின் வேலை அல்ல.

    எங்கள் வேலை, நமது எல்லைகளை பாதுகாப்பதுதான். எங்களைத் தூண்டினால், நாங்கள் (பதிலடி தராமல்) நின்றுவிட மாட்டோம். அத்துமீறிய தாக்குதல் எதுவும், தகுந்த பதிலடி தராமல் விடுபட்டு விடக்கூடாது என்பதில் நாம் உஷாராக இருக்க வேண்டும். இந்தியாவை பாதுகாப்பாக வைத்திருப்பது எங்கள் கடமை.

    தற்போது போர் நிறுத்தம் ரம்ஜான் வரைதான் அறிவிக்கப்பட்டு உள்ளது.

    நாங்கள் ஆட்சி அதிகாரத்துக்கு வந்தபோது, வெடிமருந்துகள் தட்டுப்பாடு நிலவியது. எங்களை குற்றம் சாட்டுகிற நபர்கள், இந்த தட்டுப்பாடு எங்கே இருந்து வந்தது என்பதை சொல்ல வேண்டும்.  இப்போது நான் சொல்கிறேன். தற்போது வெடிமருந்து தட்டுப்பாடு இல்லை.

    பிரதமர் மோடி, வூகனுக்கு சென்று சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்து பேசி வந்து இருக்கிறாரே, டோக்லாம் முற்றுகைக்கு பிந்தைய இந்திய சீன உறவு நிலவரம் எப்படி உள்ளது? என்று கேட்கிறீர்கள். அதற்கு பதில், இரு நாடுகளின் உறவு, சரியான பாதையில் சென்று கொண்டு இருக்கிறது என்பதுதான்.

    காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியபடி ரபேல் போர் விமான பேரத்தில் ஊழல் நடைபெறவில்லை. இது தொடர்பான முடிவு எப்படி எடுக்கப்பட்டது என்பதை விளக்குவதற்காக நாங்கள் நேரம் செலவிட்டோம்.

    அது இரு அரசாங்கங்களுக்கு இடையேயான ஒப்பந்தம் ஆகும். இதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம்.

    எஸ்-400 ஏவுகணை பேரம் தொடர்பாக ரஷியாவுடன் நடத்தி வருகிற பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தில் உள்ளது.

    அமெரிக்காவுடனான நமது அனைத்து பேச்சிலும், இந்தியாவுக்கும், ரஷியாவுக்கும் இடையேயான ராணுவ உறவு பல்லாண்டு காலமாக இருந்து வருவதை சுட்டிக்காட்டி வந்து உள்ளோம். இது காலத்தை கடந்து வந்து உள்ள உறவு. இதில் இந்தியா நிறைய சொத்துகள், உதிரிபாகங்கள், சேவைகளை பெற்று உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.  #NirmalaSitharaman
    Next Story
    ×