search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விலை உயர்வை தடுக்க பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை குறைக்க மத்திய அரசு முடிவு
    X

    விலை உயர்வை தடுக்க பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை குறைக்க மத்திய அரசு முடிவு

    விலை உயர்வை தடுக்கும் வகையில் பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை குறைக்க மத்திய அரசு முடிவு செய்து உள்ளது. #Petrol #Diesel #LowerDuties
    புதுடெல்லி:

    சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து மத்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்கள் கடந்த ஓராண்டாக தினசரி அடிப்படையில் பெட்ரோல், டீசல் மீதான விலையை உயர்த்தியும், குறைத்தும் வருகின்றன. இந்த நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை கடந்த 4 வாரங்களாக ஏறுமுகமாக உள்ளது.

    தற்போது ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை 80 அமெரிக்க டாலர்களை கடந்து விட்டது. இதனால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தற்போதுள்ளதை விட இன்னும் சில ரூபாய்கள் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக பீப்பாய் 85 டாலர்கள் என்ற நிலையை அடைந்து விட்டால் டெல்லியில் சில்லரை விற்பனையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.89 என்ற அளவிற்கு உயர்ந்து விடும். சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, ஐதராபாத் நகரங்களிலும் இந்த விலை உயர்வின் தாக்கம் கடுமையாக இருக்கும்.

    இதையடுத்து பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக மத்திய நிதி மற்றும் பெட்ரோலிய அமைச்சக அதிகாரிகள் ஓரிரு நாட்களில் சந்தித்து பேச இருக்கின்றனர்.

    இதுபற்றி பெட்ரோலிய அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், “பெட்ரோல், டீசல் விலை உயர்வை தடுக்க மத்திய அரசு அவற்றின் மீதான உற்பத்தி வரியை குறைக்க திட்டமிட்டு உள்ளது. இது மோடி அரசு 4 ஆண்டு ஆட்சியை நிறைவு செய்ததற்காக நுகர்வோருக்கு அளிக்கும் வெகுமதியாக இருக்கும்” என்றார்.

    இந்த வரி குறைப்பு அடுத்த வார இறுதியில் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    உற்பத்தி வரியை குறைப்பதன் மூலம் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 வரை குறையும்.

    அதேநேரம் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தால் 2-வது கட்டமாகவும் பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரி குறைக்கப்பட்டு விலை உயர்வை கட்டுக்குள் வைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் கூறப்படுகிறது.  #Petrol #Diesel #LowerDuties 
    Next Story
    ×