search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவள்ளூரை சேர்ந்த சர்வதேச செம்மரக்கடத்தல்காரர் உள்பட 4 பேர் கைது
    X

    திருவள்ளூரை சேர்ந்த சர்வதேச செம்மரக்கடத்தல்காரர் உள்பட 4 பேர் கைது

    செம்மரக்கடத்தலில் ஈடுபட்ட திருவள்ளூரைச் சேர்ந்த சர்வதேச கடத்தல்காரர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
    ஸ்ரீகாளஹஸ்தி:

    ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாபுஜி அட்டடா நிருபர்களிடம் கூறியதாவது:-

    கடப்பா மாவட்டத்தில் செம்மரக்கடத்தல் சம்பவங்கள் நடந்து வருகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு செம்மரக்கடத்தலில் கைது செய்யப்பட்ட கடத்தல்காரர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், தமிழகத்தில் திருவள்ளூரைச் சேர்ந்த கிரிபாபு, சென்னையைச் சேர்ந்த சர்வதேச கடத்தல்காரர்களான ஏ.டி.மைதீன் ஆகியோர் சிவலிங்கம் என்பவரின் ஆதரவாளராக இருந்து கொண்டு ஆந்திராவில் உள்ள சேஷாசலம், நல்லமாலா, லன்கமல்லா ஆகிய வனப்பகுதிகளில் செம்மரங்களை வெட்டிக்கடத்தி வருவதாக தெரிவித்தனர்.

    இதையடுத்து கிரிபாபுவை போலீசார் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். நேற்று காலை கடப்பா மாவட்டம் ராஜம்பேட்டை மண்டலம் மாதாவரம் போடு என்ற இடத்தில் காரில் செம்மரங்களை கடத்தி வந்த கிரிபாபு மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து காரும், 6 செம்மரங்களும், ரூ.11 ஆயிரத்து 220 ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டன.

    இருவரும் தெரிவித்த தகவலின்படி, ரெயில்வே கோடூரு மண்டலம் வாகுட்டிகோணா என்ற இடத்தில் லாரி மற்றும் காரில் செம்மரங்களை கடத்த தயாராக இருந்த ஜெயபிரகாஷ், நட்ராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1,108 கிலோ எடையிலான 32 செம்மரங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். ஆக மொத்தம் இருவேறு இடங்களில் 38 செம்மரங்களும், 2 கார்கள், ஒரு லாரி, ரூ.12 ஆயிரத்து 220 ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

    கைதான கிரிபாபு இதுவரை 8 ஆண்டுகளாக மைதீன் மற்றும் சிவலிங்கத்தின் கீழ் பணி புரிந்து 700 டன் செம்மரங்களை வெட்டி, வெளிநாடுகளுக்குக் கடத்தி உள்ளார். செம்மரக் கடத்தலில் சம்பாதித்த பணத்தின் மூலம் திருவள்ளூர் மற்றும் கனகம்மாசத்திரத்தில் ரூ.4 கோடி மதிப்பில் கார்மென்ட் தொழிற்சாலை அமைத்து வருகிறார்.

    கைதான நெல்லூரைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் பி.டெக். படித்துள்ளார். இவர், கிரிபாபுவுக்கு உறவினர் என்பதாலும், அதிக பணத்துக்காக ஆசைப்பட்டு மேஸ்திரி மற்றும் கூலி ஆட்களை வனப்பகுதிக்கு அனுப்பி வைத்து செம்மரங் களை கடத்தி வந்துள்ளார். திருத்தணியைச் சேர்ந்த ஜெயபிரகாஷ் மற்றும் நட்ராஜ் ஆகியோர் வாகன டிரைவர்களாக இருந்து கன்டெய்னர் லாரியில் செம்மரங்களை சென்னை, கர்நாடகாவிற்கு கடத்தி வந்துள்ளதாக தெரிய வந்தது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×