search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிள்ளைகள் கைவிட்ட நிலையில் நாதியற்று நின்ற முதியவருக்கு உதவிய பேஸ்புக்
    X

    பிள்ளைகள் கைவிட்ட நிலையில் நாதியற்று நின்ற முதியவருக்கு உதவிய பேஸ்புக்

    பெற்ற பிள்ளைகள் கைவிட்ட நிலையில் எந்த சொந்தமும் இல்லாமல் சாலையில் தஞ்சமடைந்து கிடந்த ஆக்ஸ்போர்ட் பட்டதாரி முதியவருக்கு பேஸ்புக் மூலம் தற்போது உதவிகள் குவிந்து வருகிறது.
    புதுடெல்லி:

    வீட்டை விட்டு தொலைந்து போனவர்கள், பிரிந்து சென்றவர்கள் என பலர் தங்களது குடும்பத்தினருடன் இணைந்ததற்கு இணையதளம் ஒரு காரணமாக இருந்திருக்கிறது. தற்போது, குடும்பத்தினர் கைவிட்டு ரோட்டில் தஞ்சமடைந்துள்ள ஒரு முதியவருக்கு குட்டி வீடு கிடைக்க பேஸ்புக் காரணமாகியுள்ளது.

    டெல்லியைச் சேர்ந்த அவினாஷ் சிங் சில நாட்களுக்கு முன்னர் தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு முதியவரின் சில புகைப்படங்களை பதிவிட்டிருந்தார். அந்த பதிவில் அந்த முதியவர் குறித்தான தகவல்களையும் அவர் தெரிவித்திருந்தார். பிரிட்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற ராஜா சிங் புல், கடந்த 1960-ம் ஆண்டு இந்தியா வந்துள்ளார்.

    டெல்லியில் தனது சகோதரர் கவனித்து வந்த மோட்டார் உதிரி பாகங்கள் விற்பனை தொழிலில் தன்னை ஈடுபடுத்தியுள்ளார். தனது சகோதரர் திடீரென இறந்து விட்டதால், தொழிலை தானே தலைமையேற்று அவர் நடத்தியுள்ளார். ஆனால், கடும் நஷ்டத்தை சந்திக்கவே நிறுவனம் இழுத்து மூடப்பட்டது.

    1970-ம் ஆண்டு தனது வீடு உள்ளிட்ட சில சொத்துக்களை விற்று கடன்களை அடைத்து விட்ட ராஜா சிங், புதுடெல்லி ரெயில் நிலையத்தின் வெளியே தங்க தொடங்கினார். அன்று முதல் சில நாட்களுக்கு முன்னர் வரை அவர் அங்குதான் வசித்துள்ளார். அருகிலுள்ள கட்டண கழிப்பறைக்கு சென்று தினமும் தன்னை தூய்மைப்படுத்திக்கொண்டு, பாபா கதாக் சிங் வீதியில் உள்ள விசா விண்ணப்பிக்கும் மையத்திற்கு ராஜா சிங் சென்று விடுவார்.



    விசா விண்ணப்பிக்க வருபவர்களுக்கு உதவுவது அவருக்கு பிடித்தமான பணி. சிலர் பணம் அளிப்பார்கள் அதனை கொண்டு தனது வயிற்றை நிரப்பியுள்ளார். சீக்கிய குருத்துவாராக்களில் இலவசமாக மூன்று வேளையும் உணவு வழங்குவார்கள். ஆனால், ராஜா சிங் அங்கு ஒருநாள் கூட நுழைந்தது இல்லையாம்.

    ‘என் வயிறுக்கு என்னால் சம்பாதிக்க முடியும். பின்னர் ஏன் நான் இலவச உணவு தேட வேண்டும்’ என சுயமரியாதைக்காரராக அவர் இருந்துள்ளார். ஆக்ஸ்போர்ட் பல்கலையில் பட்டம் பெற்றவர் ஏன் சாலையில் தங்க வேண்டும்? என அவரிடம் கேட்டதற்கு 9 முறை பல்வேறு நிறுவனங்களுக்கு இண்டர்வியூ சென்றுள்ளேன். எந்த வேலையிலும் நிரந்தரமாக இருந்தது இல்லை என கூறியுள்ளார்.

    எனது குழந்தைகள் அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் உள்ளனர். ஆனால், நான் உயிருடன் உள்ளேனா என்று கூட அவர்கள் முயற்சித்தது கிடையாது என வேதனையுடன் ராஜா சிங் தெரிவித்துள்ளார்.

    ராஜா சிங் குறித்தான அவினாஷ் சிங்கின் பேஸ்புக் பதிவை 4 ஆயிரம் பேர் மற்றவர்களுக்கு பகிர்ந்தனர். இதனால், அவருக்கு பலர் உதவிக்கரங்களை நீட்டியுள்ளனர். சாலையில் வசித்தவருக்கு தற்போது புதிய வீடு கிடைத்துள்ளது. பலர் தங்களால் முடிந்த உதவிகளை ராஜா சிங்-க்கு செய்து வருகின்றனர்.

    அத்தனை உதவிகள் கிடைத்தாலும் தினமும் விசா மையத்திற்கு சென்று அங்குள்ளவர்களுக்கு உதவி நெகிழ வைக்கிறார் ராஜா சிங். 
    Next Story
    ×