search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டயானா ஹைடன் குறித்த விமர்சனம் - திரிபுரா முதல் மந்திரிக்கு டுவிட்டரில் குவிந்த கண்டனங்கள்
    X

    டயானா ஹைடன் குறித்த விமர்சனம் - திரிபுரா முதல் மந்திரிக்கு டுவிட்டரில் குவிந்த கண்டனங்கள்

    டயானா ஹைடன் குறித்த விமர்சனத்துக்கு திரிபுரா முதல் மந்திரி பிப்லப் தேபுக்கு டுவிட்டரில் கடும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன. #BiplabDeb
    புதுடெல்லி:

    திரிபுரா முதல் மந்திரியாக சில மாதங்களுக்கு முன் பதவியேற்றவர் பா.ஜ.க.வை சேர்ந்த பிப்லப் தேப். இவர் அகர்தலா நகரில் கைத்தறி பயிற்சி பட்டறை ஒன்றில் நேற்று பங்கேற்றார்.

    அப்போது அவர் பேசுகையில், “சர்வதேச நிறுவனங்கள் தங்கள் பொருட்களின் சந்தையை தக்கவைக்க அதிக கவனம் எடுத்துக் கொள்கின்றன. அதற்காகவே, இந்தியாவில் இருந்து இதுவரை ஐந்து பேரை உலக அழகி பட்டத்துக்கு தேர்வு செய்துள்ளனர். டயானா ஹைடன் கூட உலக அழகி பட்டம் வென்றுள்ளார். ஆனால், அவரிடம் இந்திய அழகை நான் காணவில்லை. ஐஸ்வர்யா ராயிடம் மட்டுமே அந்த அழகு உள்ளது” என்றார். ஆங்கிலோ இந்தியரான டயானா ஹைடன் 1999-ம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்றவர். 

    இந்நிலையில், டயானா ஹைடன் குறித்த விமர்சனத்துக்கு திரிபுரா முதல் மந்திரி பிப்லப் தேபுக்கு டுவிட்டரில் கடும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.



    இதுதொடர்பாக சமூக ஆர்வலர் கவிதா கிருஷ்ணன் கூறுகையில், பிப்லப் தேபின் இந்த கருத்து முட்டாள்தனமானது என பதிவிட்டுள்ளார். 

    டெல்லி முதல் மந்திரியின் ஆலோசகர் நாகேந்தர் சர்மா கூறுகையில், திரிபுரா முதல் மந்திரியின் இந்த கருத்து இந்த ஆண்டின் முட்டாள்தனமான கருத்து என பதிவிட்டுள்ளார்.

    மூத்த பத்திரிகையாளர் ஒருவர் கூறுகையில், திரிபுரா முதல் மந்திரி புதிய பொழுதுபோக்குவாதி என்ற காரணத்துக்காகவே அவரது கருத்தை ஆதரிக்கலாம் என கிண்டலாக பதிவிட்டுள்ளார். இதேபோல் பலரும் திரிபுரா முதல் மந்திரிக்கு தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

    பொது இடங்களில் பா.ஜ.க. பிரமுகர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் பேசவேண்டும் என பிரதமர் மோடி சமீபத்தில் கூறியிருந்த நிலையில், திரிபுரா முதல் மந்திரி பிப்லப் தேபின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

    இவர் ஏற்கனவே மகாபாரதம் காலத்திலேயே இணையதளம் இருந்தது எனக்கூறி சர்ச்சையில் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. #BiplabDeb # Tamilnews
    Next Story
    ×