search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மக்களிடம் பேசி அவர்கள் மனதில் இடம்பிடியுங்கள் - கர்நாடகா பாஜக வேட்பாளர்களிடம் பிரதமர் மோடி பேச்சு
    X

    மக்களிடம் பேசி அவர்கள் மனதில் இடம்பிடியுங்கள் - கர்நாடகா பாஜக வேட்பாளர்களிடம் பிரதமர் மோடி பேச்சு

    கர்நாடக மாநில பாஜக வேட்பாளர்கள் மற்றும் அந்த மாநிலத்தைச் சேர்ந்த பாஜக தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நமோ ஆப் மூலம் உரையாற்றினார். #PMmodi #KarnatakaElections #NaMoapp
    புதுடெல்லி:

    கா்நாடக மாநிலத்தில் மே 12-ம் தேதி சட்டமன்ற தோ்தல் நடைபெற உள்ளது. இதற்காக கர்நாடகாவில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து மே 1-ம் தேதி முதல் 8-ம் தேதி வரையில் பிரதமர் மோடி பிரசாரம் செய்ய உள்ளார். இந்நிலையில், கர்நாடக மாநில பாஜக வேட்பாளர்கள் மற்றும் அந்த மாநிலத்தைச் சேர்ந்த பாஜக தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நமோ ஆப் மூலம் உரையாற்றினார்.

    அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:- “ கர்நாடக தேர்தலுக்காக காங்கிரஸ் பொய்யான தகவல்களை பரப்பி வருகிறது. வளர்ச்சி என்ற ஒற்றை இலக்கை நோக்கி பாரதிய ஜனதா கட்சி செயல்பட்டு வருகிறது. பொய்யான வாக்குறுதிகளை கூறி குறிப்பிட்ட சாதி மக்களை காங்கிரஸ் அரசு ஏமாற்றுகிறது. நமது பலமே, நமது கட்சியின் இளைஞர் படைதான். வளர்ச்சி சிறப்பாக இருப்பதால், வளர்ச்சி பற்றி விவாதம் மேற்கொள்ள கட்சிகள் அஞ்சுகின்றன. சாதிய ரீதியில் அரசியல் செய்யும் கட்சிகளுக்கு வளர்ச்சி ஒரு பொருட்டு அல்ல. கர்நாடக மாநிலத்தின் மந்தமான வளர்ச்சிக்கு காங்கிரஸ் அரசே முழு பொறுப்பு. பெரும்பான்மையான ஒரு அரசை தேர்வு செய்யும் வகையில் மக்கள் வாக்களிக்க வேண்டும்.

    தேர்தல் பிரச்சாரத்தில் ஆண்களும், பெண்களும் இடம்பெற வேண்டும். வேட்பாளர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் மக்களின் வீடுகளுக்கு சென்று அவர்களின் குறைகளை கேட்டறிய வேண்டும். மாநிலத்தில் வெற்றி பெறுவது நமது நோக்கம் அல்ல. அனைத்து தொகுதியிலும் வெற்றி பெறுவதே நோக்கம். மக்களிடம் பேசி அவர்களின் மனதில் இடம்பிடியுங்கள்' என பிரதமர் மோடி பேசினார்.

    மேலும், உத்தர பிரதேசத்தில் ரயில் மோதியதில் மாணவர்கள் பலியான சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்தார். இது குறித்து மோடி கூறுகையில், “உத்தர பிரதேசத்தில்  ரயில் மோதியதில் பள்ளி மாணவர்கள் 11 பேர் பலியான சம்பவம் குறித்த செய்தி அறிந்து நான் மிகுந்த வருத்தம் அடைந்தேன். இந்த விவகாரத்தில் ரயில்வே துறையும் மாநில அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.  #PMmodi #KarnatakaElections #NaMoapp
    Next Story
    ×