search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குரங்கணி காட்டுத் தீ விபத்து குறித்த விசாரணை 2-ந் தேதிக்கு ஒத்திவைப்பு
    X

    குரங்கணி காட்டுத் தீ விபத்து குறித்த விசாரணை 2-ந் தேதிக்கு ஒத்திவைப்பு

    குரங்கணி காட்டுத் தீ விபத்து பற்றிய வழக்கு விசாரணையை தேசிய பசுமை தீர்ப்பாயம் மே 2-ந் தேதிக்கு ஒத்தி வைத்தது. #TheniFire #Kurangani #NGT
    புதுடெல்லி:

    தேனி மாவட்டம் குரங்கணி வனப்பகுதியில் கடந்த மாதம் 11-ந் தேதி ஏற்பட்ட காட்டு தீ விபத்தில் மலையேற்றத்திற்காக சென்ற 23 பேர் பலியாயினர். பலர் படுகாயமடைந்தனர்.

    இந்த நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்கனவே ஏற்பட்ட காட்டுத்தீ தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ராஜீவ் தத்தா என்ற வக்கீல் மத்திய அரசுக்கு எதிராக தாக்கல் செய்த மூல மனுவின் மீது இடைக்கால மனு ஒன்றை தாக்கல் செய்தார்.



    இதன் மீதான விசாரணை டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நீதிபதிகள் ஜாவேத் ரஹீம், எஸ்.பி. வாங்டி, நகின் நந்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடந்து வருகிறது. கடந்த 13-ந் தேதி நடந்த விசாரணையின்போது குரங்கணி காட்டுத் தீ விபத்து குறித்து தமிழக அரசு ஏப்ரல் 24-ந் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர்.

    இந்த மனுவின் மீதான விசாரணை நேற்று மீண்டும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் அதே அமர்வில் நடைபெற்றது. அப்போது தமிழக அரசு தரப்பில் அரசு வக்கீல் ராகேஷ் சர்மா ஆஜராகி இந்த சம்பவம் குறித்த தமிழக அரசின் அறிக்கையை தாக்கல் செய்தார்.

    இந்த சம்பவத்தில் வனத்துறையின் அனுமதி பெறாமல் மலையேற்றக் குழுவினர் அரசு அங்கீகரித்த பாதையை தவிர்த்து மாற்றுப் பாதையில் சென்றதாகவும் பொதுவாக அனைவரும் மாலையே திரும்பும் நிலையில் இவர்கள் இரவில் தங்கியிருந்ததாகவும் தெரிவித்தார்.

    மேலும் இந்த விபத்து குறித்து உரிய விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. எனவே, முழு அறிக்கையை தாக்கல் செய்ய மேலும் 2 மாத கால அவகாசம் தேவை என கோரிக்கை விடுத்தார்.

    மலை காட்டுப்பகுதிகளில் சுற்றுலா பயணிகளை அனுமதிக்கவும், தீ விபத்துகளை தடுக்கவும் உரிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பதிலளிக்க தங்களுக்கு மேலும் அவகாசம் தேவை என மத்திய அரசு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

    இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கின் மீதான விசாரணையை மே 2-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.  #Tamilnews #TheniFire #Kurangani #NGT
    Next Story
    ×