search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திரிணாமுல் - பாஜக தொண்டர்கள் மோதல்
    X
    திரிணாமுல் - பாஜக தொண்டர்கள் மோதல்

    மேற்கு வங்காளம் தேர்தல் பஞ்சாயத்து - பாஜக, காங். மனுக்களை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்

    மேற்கு வங்காளம் மாநில பஞ்சாயத்து தேர்தலை நிறுத்தி வைக்கக்கோரி காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. தாக்கல் செய்த மனுக்களை கொல்கத்தா ஐகோர்ட் இன்று தள்ளுபடி செய்தது. #WestBengalPanchayatPoll
    கொல்கத்தா:

    மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள பஞ்சாயத்து அமைப்புகளுக்கு வரும் மே மாதம் 1,3,5 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வந்த நிலையில் ஆளும் திரிணாமுல் கட்சியினர் எதிர்க்கட்சிகளை வேட்பு மனு தாக்கல் செய்ய விடுவதில்லை எனவும், வேட்புமனுக்களை அதிகாரிகள் வழங்குவது இல்லை எனவும் புகார் எழுந்தது.

    இதனையடுத்து, அம்மாநில பா.ஜ.க சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் தேர்தல் கமிஷன் முடிவில் நீதிமன்றம் தலையிடாது என தெரிவித்தனர்.



    பஞ்சாயத்து தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசிநாள் கடந்த 9-ம் தேதியுடன் முடிந்த நிலையில் தேர்தல் ஆணையத்திற்கு அரசியல் கட்சிகள் தரப்பில் நெருக்கடி கொடுக்கப்பட்டது. இதனையடுத்து வேட்பு மனுவை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை கூடுதலாக ஒருநாள் நீட்டித்து தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது.

    ஆனால், மறுநாள் காலை வேட்புமனு தாக்கல் செய்வதற்கு நீட்டிக்கப்பட்ட காலக்கெடுவை மாநில தேர்தல் ஆணையம் திடீரென ரத்து செய்ததுது. இதனையடுத்து, கொல்கத்தா நகரில் உள்ள மாநில தலைமை தேர்தல் ஆணைய அலுவலகத்தின் முன்னர் பா.ஜ.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மாநில தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைக்கு எதிராக அம்மாநில பா.ஜ.க சார்பில் கொல்கத்தா ஐகோர்ட்டில் அவசர மனு தாக்கல் செய்ப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள் 16-ம் தேதிவரை பஞ்சாயத்து தேர்தல் நடத்துவதற்கான பணிகளை மேற்கொள்ள தடை விதித்தனர்.

    கடந்த 20-ம் தேதி (வெள்ளிக்கிழமை) இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, வேட்பாளர்கள் வேட்புமனுவை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை ஒருநாள் நீட்டித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மாநில அரசுடன் கலந்து ஆலோசித்து தேர்தல் ஆணையம் இது தொடர்பாக முடிவெடுக்கவும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

    சனி மற்றும் ஞாயிறு அன்று விடுமுறை என்பதால் வேட்புமனு தாக்கல் கால நீட்டிப்பு நேற்று காலை தொடங்கி மாலை 5 மணியுடன் முடிவடைந்தது. பல பகுதிகளில் பா.ஜ.க மற்றும் திரிணாமுல் கட்சியினரிடையே மோதல் ஏற்பட்டது. இதனால், தேர்தல் பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும் என பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கட்சியினர் கொல்கத்தா ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

    இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், அனைவரின் கண்காணிப்பின் கீழ் தேர்தல் வேட்புமனு தாக்கல் நடந்துள்ளதாகவும், அடுத்தகட்ட பணிகள் தொடர்ந்து நடைபெற எந்த தடையும் விதிக்க முடியாது என கூறிய நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்தனர். #WestBengalPanchayatPolls #TamilNews
    Next Story
    ×