search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இலீஸ் பேட்டி அளித்த காட்சி, அருகில் கொலையுண்ட லிகாவின் கணவர் ஆண்ட்ரூஸ்
    X
    இலீஸ் பேட்டி அளித்த காட்சி, அருகில் கொலையுண்ட லிகாவின் கணவர் ஆண்ட்ரூஸ்

    போலீசாரின் அலட்சியத்தால் வெளிநாட்டு பெண் கொலை - சகோதரி குற்றச்சாட்டு

    கேரளாவில் போலீசாரின் அலட்சியத்தால் வெளிநாட்டு பெண் கொலை செய்யப்பட்டுள்ளதாக லிகாவின் சகோதரி இலீஸ் போலீசார் மீது பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறி உள்ளார்.
    திருவனந்தபுரம்:

    கேரளாவின் ஆயுர்வேத சிகிச்சை உலக புகழ்பெற்றது ஆகும். இதனால் இங்குள்ள ஆயுர்வேத மருத்துவமனைகளில் தங்கி இயற்கை மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக உள்நாடு மற்றும் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் வருகை தருகிறார்கள்.

    லாத்வியா நாட்டை சேர்ந்த லிகா என்ற பெண் தனது சகோதரி இலீஸ் என்பவருடன் கடந்த மார்ச் மாதம் திருவனந்தபுரம் அருகே உள்ள போத்தன் கோட்டில் உள்ள ஒரு ஆயுர்வேத மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக வந்தார்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் லிகா திடீரென்று மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது சகோதரி இலீஸ் போத்தன்கோடு போலீசில் இதுபற்றி புகார் செய்தார். போலீசார் வெளிநாட்டு பெண் மாயமானது பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் திருவனந்தபுரம் அருகே உள்ள கோவளத்தில் காட்டு பகுதியில் தலை துண்டான நிலையில் லிகா பிணமாக கிடப்பது தெரியவந்தது. அவரது பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

    இதுபற்றி மர்ம சாவு என வழக்கு பதிவு செய்து போலீசார் விசரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் லிகாவின் சகோதரி இலீஸ் போலீசார் மீது பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறி உள்ளார். இது தொடர்பாக திருவனந்தபுரத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:-

    ஆயுர்வேத சிகிச்சை மருத்துவமனையில் இருந்து எனது சகோதரி மாயமான அன்றே போலீசில் நான் புகார் செய்தேன். ஆனால் போலீசார் எனது சகோதரியை கண்டுபிடிக்க உடனடியாக எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. அவர்கள் ஆரம்பத்தில் இருந்தே இந்த வழக்கை அலட்சியமாக விசாரித்தனர்.


    லிகா

    நான் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த பிறகுதான் போலீசார் விசாரணையை தொடங்கினார்கள். இதற்கிடையில் எனது சகோதரி பிணமாக மீட்கப்பட்டு உள்ளார். அவரை யாரோ கொலை செய்து பிணத்தை அங்கு வீசி சென்று உள்ளனர்.

    ஆனால் போலீசார் இதை கொலையாக கருதாமல் எனது சகோதரி தற்கொலை செய்துகொண்டார் என்று கூறுகிறார்கள். அவர்களது விசாரணையும் அந்த கோணத்தில்தான் நடக்கிறது. தற்கொலை செய்துகொள்ள எனது சகோதரிக்கு எந்த காரணமும் கிடையாது. அவரை கொலை செய்து உள்ளனர்.

    இதில் சம்பந்தப்பட்டவர்களை உடனே கண்டுபிடிக்க வேண்டும். போலீசார் முதலிலேயே விசாரணையை தீவிரப்படுத்தி இருந்தால் எனது சகோதரியை உயிருடன் மீட்டிருக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    லிகாவின் கணவர் ஆன்ட்ரூஸ் கூறும்போது எனது மனைவியின் மரணத்திற்கு முழுக்க, முழுக்க கேரள போலீசார்தான் காரணம். போலீசார் எங்களிடம் தொடர்ந்து கடுமையாகவே நடந்துகொண்டனர். எனது மனைவியின் மரணத்தில் உள்ள உண்மை தெரியும் வரை நான் ஓயமாட்டேன் என்றார்.

    கேரள சட்டசபை எதிர்கட்சி தலைவரும், காங்கிரஸ் கட்சி தலைவர்களில் ஒருவருமான ரமேஷ் சென்னிதலாவும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது கேரளாவில் கம்யூனிஸ்டு கட்சியின் ஆட்சியில் போலீசார் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதை இதன்மூலம் தெரிந்துகொள்ளலாம். வெளிநாட்டு பெண் மரணத்தில் குற்றவாளிகளை உடனே கண்டுபிடிக்க வேண்டும் என்றார்.
    Next Story
    ×