search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குழந்தையை கொன்று புதைத்த இடத்தில் போலீசார் விசாரணை நடத்திய காட்சி.
    X
    குழந்தையை கொன்று புதைத்த இடத்தில் போலீசார் விசாரணை நடத்திய காட்சி.

    பச்சிளம் குழந்தையை கொன்று புதைத்த தாய் கணவருடன் கைது

    கேரளாவில் குறை பிரசவத்தில் பிறந்த பெண் குழந்தையை கொன்று புதைத்த தாயையும் அவரது கணவரையும் போலீசார் கைது செய்தனர்.
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள புதூர் பகுதியில் பச்சிளம் குழந்தை ஒன்றின் உடலை கவ்வியபடி தெரு நாய் ஒன்று சென்றது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி பொதுமக்கள் அந்த நாயை விரட்டி அடித்து குழந்தையின் பிணத்தை மீட்டனர்.

    இதுபற்றி புதூர் போலீசுக்கும் பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று குழந்தையின் பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். அப்போது அந்த குழந்தை அதே பகுதியை சேர்ந்த அம்புலி என்ற பெண்ணுக்கு பிறந்ததும் பெற்ற தாயே பச்சிளம் குழந்தையை கொன்று புதைத்த அதிர்ச்சி தகவலும் வெளியானது.

    அம்புலியின் கணவர் பெயர் மகேஷ். இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட வர்கள். இந்த தம்பதிக்கு 2 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் அம்புலி மீண்டும் கர்ப்பம் அடைந்தார். அவர்கள் வறுமையில் வாடியதால் தற்போது குழந்தை பிறந்தால் அதை வளர்க்க சிரமம் ஏற்படும் என்று நினைத்து கருவை கலைக்க முடிவு செய்தனர்.

    இதனால் அந்த பகுதியில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு அம்புலியும், அவரது கணவரும் சென்று கரு கலைப்பது பற்றி டாக்டரிடம் ஆலோசனை நடத்தினார்கள். ஆனால் 4 மாதம் கரு வளர்ந்துவிட்டதால் கருவை கலைத்தால் தாயின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று கூறி டாக்டர்கள் அதற்கு மறுத்து விட்டனர்.

    இந்த நிலையில் வீட்டில் வைத்து அம்புலிக்கு குறை பிரசவமாக பெண் குழந்தை ஒன்று பிறந்தது. அந்த குழந்தையை அம்புலியும், அவரது கணவரும் சேர்ந்து கொன்று வீட்டு அருகே உள்ள புதர் பகுதியில் புதைத்துவிட்டனர். ஆனால் அந்த குழந்தை பிணத்தை நாய் கவ்வி சென்றதால் அவர்களது குட்டு வெளிப்பட்டு விட்டது.

    இதைதொடர்ந்து அம்புலியையும், அவரது கணவர் மகேசையும் போலீசார் கைது செய்தனர்.
    Next Story
    ×