search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தனியார் வங்கியில் திருப்பதி கோயில் பணம் - பொதுநல வழக்கில் 24-ம் தேதி விசாரணை
    X

    தனியார் வங்கியில் திருப்பதி கோயில் பணம் - பொதுநல வழக்கில் 24-ம் தேதி விசாரணை

    திருப்பதி கோயிலுக்கு பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணத்தை தனியார் வங்கியில் போட்டு வைத்துள்ள நிர்வாகத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பொதுநல மனுவை ஐகோர்ட் 24-ம் தேதி விசாரிக்கவுள்ளது.
    ஐதராபாத்:

    திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பக்தர்கள் பல்வேறு முறைகளில் காணிக்கையாக செலுத்திய பணத்தை அரசு வங்கிகளில்தான் முதலீடு செய்து பாதுகாத்து வர வேண்டும் என்ற விதிமுறை பின்பற்றப்பட்டு வந்தது.

    இந்நிலையில், தனியாருக்கு சொந்தமான இன்டஸ் இன்ட் வங்கியில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் திருப்பதி - திருமலா தேவஸ்தானத்தின் புதிய நிர்வாகத்தினர் போட்டு வைத்துள்ளதாக தெரிய வந்தது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராயலசீமா போராட்ட சமிதி என்ற அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் நவீன்குமார் ரெட்டி என்பவர் ஆந்திரா - தெலுங்கானா மாநில ஐகோர்ட்டில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

    அரசு விதிமுறைகளை மீறிய வகையில் திருப்பதி கோயிலுக்கு சொந்தமான பணம் தனியார் வங்கியில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
    திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி ஆகட்டும், முதல் மந்திரி ஆகட்டும் பக்தர்கள் கடவுளுக்கு காணிக்கையாக அளிக்கம் பணத்தை தவறாக பயன்படுத்த யாருக்கும் உரிமை இல்லை. ஏழுமலையானின் தீவிர பக்தரான நான், கடவுளின் சொத்துகளை காப்பாற்ற வேண்டும் என்ற பொறுப்பை உணர்ந்தும், ஏழுமலையானின் தூண்டுதலின்பேரிலும் இந்த பொதுநல மனுவை தாக்கல் செய்துள்ளேன் என நவீன்குமார் ரெட்டி குறிப்பிட்டிருந்தார்.

    இந்த பொதுநல மனுவை கடந்த 19-ம் தேதி ஆந்திரா - தெலுங்கானா மாநில ஐகோர்ட் விசாரணைக்கு ஏற்றது.

    இந்நிலையில், இவ்வழக்கின் பிரதிவாதிகளாக அரசின் சிறப்பு தலைமை செயலாளர், மாநில அறநிலையத்துறை ஆணையாளர், திருப்பதி - திருமலா தேவஸ்தான தலைமை செயல் அதிகாரி ஆகியோரை இணைத்து ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    வரும் 24-ம் தேதி இவ்வழக்கின் முதல் விசாரணையின்போது அவர்கள் ஆஜராக வேண்டும் என நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது. #tamilnews
    Next Story
    ×