search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிரவ் மோடி ஹாங்காங்கில் இருந்து வேறு நாட்டுக்கு தப்பி ஓட திட்டம்
    X

    நிரவ் மோடி ஹாங்காங்கில் இருந்து வேறு நாட்டுக்கு தப்பி ஓட திட்டம்

    நிரவ்மோடி அங்கு கைதாவதில் இருந்து தப்பிக்க ஹாங்காங்கை விட்டு வேறு நாட்டுக்கு தப்பி செல்ல திட்டமிட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது. #PNBScam #niravmodi #hongkong
    புதுடெல்லி:

    பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் ரூ. 13 ஆயிரம் கோடி மோசடி செய்த வைர வியாபாரிகள் நிரவ்மோடி, மெகுல் கோக்ஷி ஆகியோர் வெளிநாட்டுக்கு தப்பி சென்று விட்டனர்.

    அவர்களை கைது செய்வதற்கு சி.பி.ஐ. தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இதற்காக கோர்ட்டு மூலம் அவர்கள் இருவருக்கும் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

    இதன் மூலம் சர்வதேச போலீஸ் உதவியுடன் அவர்களை கைது செய்ய ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.

    இந்தியாவில் குற்றம் செய்து வெளிநாட்டில் பதுங்கி இருக்கும் ஒருவரை கைது செய்ய வேண்டும் என்றால் சர்வதேச போலீசார் அவரை தேடும் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும்.

    எனவே, இவ்வாறு அறிவிக்க வைக்க தேவையான முயற்சிகளை சி.பி.ஐ. கையாண்டு வருகிறது. மேலும் ஒரு நாட்டில் பதுங்கி இருந்தால் அங்கிருந்து கைது செய்து அழைத்து வர இந்தியாவுடன் கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தமும் இருக்க வேண்டும்.

    தற்போது குற்றவாளிகளில் ஒருவரான நிரவ் மோடி ஹாங்காங்கில் பதுங்கி இருப்பதாக சி.பி.ஐ.க்கு தெரிய வந்துள்ளது. எனவே, அவரை கைது செய்து தங்களிடம் ஒப்படைக்கும்படி ஹாங்காங் நீதித்துறைக்கு இந்தியா வேண்டுகோள் விடுத்துள்ளது.

    இந்தியா-ஹாங்காங் இடையே 1997-ம் ஆண்டு கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது. இதன் அடிப்படையில் அவரை கைது செய்து ஒப்படைக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    இந்த முயற்சிகள் நடப்பதை தெரிந்து கொண்ட நிரவ்மோடி அங்கு கைதாவதில் இருந்து தப்பிக்க ஹாங்காங்கை விட்டு வேறு நாட்டுக்கு தப்பி செல்ல திட்டமிட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது.

    ஹாங்காங்கில் அவர் எங்கு பதுங்கி இருக்கிறார் என்று தெரியவில்லை. எப்படியாவது ஹாங்காங்கில் வைத்தே அவரை கைது செய்து கொண்டு வர வேண்டும் என்று அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

    இந்திய அரசு ஹாங்காங்குக்கு விடுத்த வேண்டுகோள் 60 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். எனவே, அதற்குள் கைது செய்து ஆக வேண்டும்.

    2004-ம் ஆண்டு அசோக் தகில்ராவ் என்பவர் யூனியன் வங்கி, மகராஷ்டிரா வங்கி ஆகியவற்றில் ரு. 8½ கோடி மோசடி செய்து விட்டு தப்பி ஓடி ஹாங்காங்கில் பதுங்கி இருந்தார். அவரை ஹாங்காங் போலீசார் கைது செய்து இந்தியாவிடம் ஒப்படைத்தனர்.

    இதே போல் இப்போதும் நிரவ் மோடியையும் கைது செய்து ஒப்படைப்பார்கள் என்ற எதிர்பார்ப்புடன் சி.பி.ஐ. போலீசார் காத்து இருக்கிறார்கள். #PNBScam #niravmodi #hongkong
    Next Story
    ×