search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிறுமிகளை கற்பழித்தால் மரண தண்டனை விதிக்க அவசர சட்டம்-மத்திய மந்திரி சபை கூட்டத்தில் பிரதமர் ஆலோசனை
    X

    சிறுமிகளை கற்பழித்தால் மரண தண்டனை விதிக்க அவசர சட்டம்-மத்திய மந்திரி சபை கூட்டத்தில் பிரதமர் ஆலோசனை

    சிறுமிகளை கற்பழிக்கும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க வகை செய்யும் அவசர சட்டம் தொடர்பாக இன்று நடைபெற உள்ள மந்திரிசபை கூட்டத்தில் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார். #Deathpenalty #pmmodi #cabinet
    புதுடெல்லி:

    வட மாநிலங்களில் சிறுமிகள் கற்பழிப்பு சம்பவம் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் காஷ்மீரில் 8 வயது சிறுமி கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதேபோல் உத்தர பிரதேசத்தில் உன்னாவ் பகுதியில் 18 வயது சிறுமி கற்பழிப்பு விவகாரத்தில் பா.ஜனதா எம்.எல்.ஏ. மீது புகார் கூறிய தந்தை போலீஸ் நிலையத்தில் மர்மமான முறையில் இறந்தார்.

    இந்த இரு சம்பவங்களையும் கண்டித்து மகளிர் அமைப்பினரும் அரசியல் கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    டெல்லியில் மகளிர் ஆணைய தலைவி ஸ்வாதி மாலிவால் சிறுமிகள் கற்பழிப்பு சம்பவத்தை கண்டித்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இன்று 9-வது நாளாக உண்ணாவிரதத்தை தொடர்ந்தார்.

    சிறுமிகள் கற்பழிப்பு விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. நேற்று இந்த வழக்கு விசாரணையின் போது மத்திய அரசின் சார்பில் வக்கீல் ஆஜராகி, 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை கற்பழிக்கும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்றும், இதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுக்கும் என்றும் தெரிவித்து இருந்தார்.

    இதையடுத்து மரண தண்டனை விதிக்க வகை செய்யும் அவசர சட்டம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

    5 நாட்கள் வெளிநாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் மோடி இன்று காலை டெல்லி திரும்பினார். உடனடியாக அவர் மத்திய மந்திரி சபையின் அவசர கூட்டத்தை கூட்டியுள்ளார். இதில் அனைத்து மத்திய மந்திரிகளும் கலந்து கொள்கின்றனர்.

    இதில் சிறுமிகள் கற்பழிப்பு சம்பவத்தில் சிறுவர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் (போக்சோ) தண்டனையை அதிகரிப்பது குறித்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தற்போது இந்த சட்டத்தின் கீழ் அதிகபட்சமாக ஆயுள் தண்டனையும் குறைந்த பட்சமாக 7 ஆண்டு சிறை தண்டனையும் வழங்கப்படுகிறது. இனி அதிகபட்சமாக மரண தண்டனையும், குறைந்தபட்சமாக 10 ஆண்டுகளும் தண்டனை விதிக்கும் வகையில் போக்சோ சட்டத்தில் திருத்தம் செய்வது, இதற்காக அவசர சட்டம் கொண்டு வருவது பற்றி ஆலோசிக்கப்படுகிறது.

    இதேபோல் பொருளாதார குற்றங்களில் ஈடுபடுவோர் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வதை தடுப்பதற்கான அவசர சட்டமும் கொண்டு வரப்படுகிறது.

    தற்போது நாட்டில் பொருளாதார குற்றங்களில் ஈடுபடுவோருக்கு எதிராக கடுமையான தண்டனை இல்லை. இதனால் அவர்கள் எளிதில் தப்பி விடுகிறார்கள். இதனை தடுக்கும் வகையில் சட்ட திருத்தம் செய்வதற்கான அவசர சட்டம் கொண்டு வரப்படுகிறது.

    இந்த இரு அவசர சட்டங்களுக்கும் மத்திய மந்திரி சபை ஒப்புதல் வழங்கி ஜனாதிபதியின் அனுமதிக்கு சிபாரிசு செய்யப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. #tamilnews #Deathpenalty #pmmodi #cabinet
    Next Story
    ×