search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பதி தரிசன டிக்கெட்டுக்கு அதிக பணம் வசூல்- 8 போலி இணையதளங்கள் மீது புகார்
    X

    திருப்பதி தரிசன டிக்கெட்டுக்கு அதிக பணம் வசூல்- 8 போலி இணையதளங்கள் மீது புகார்

    திருப்பதியில் தரிசன டிக்கெட்டுக்கு அதிக பணம் வசூல் செய்வதாக 8 போலி இணையதளங்கள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
    திருமலை:

    திருப்பதியில் தினசரி ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    பக்தர்களின் வசதிக்காக திருமலை திருப்பதி தேவஸ்தானம் தற்போது தரிசனம், வாடகை அறை முன்பதிவு, உண்டியல் காணிக்கை சமர்ப்பித்தல், நன்கொடை வழங்குதல், ஸ்ரீவாரி சேவைகள் உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் இணையதளம் மூலம் வழங்கி வருகிறது.

    இதனை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, சிலர் போலி இணையதளங்களை உருவாக்கி ஏழுமலையான் தரிசன டிக்கெட், லட்டு பிரசாதம் உள்ளிட்டவற்றை அதிக கட்டணத்துக்கு முன்பதிவு செய்து அளித்து வருவதாகக் கூறப்படுகிறது.

    இதுகுறித்து பக்தர்கள் தேவஸ்தான செயல் அதிகாரி அனில்குமார் சிங்காலிடம் புகார் அளித்தனர்.

    அவர் போலி இணையதளங்களைக் கண்டறிந்து, அவற்றின் மீது நடவடிக்கை எடுக்குமாறு தேவஸ்தான பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புத்துறை தலைமை அதிகாரி ரவிகிருஷ்ணாவுக்கு உத்தரவிட்டார்.

    இதையடுத்து அவர் தேவஸ்தானம் பெயரில் இயங்கி வரும் 8 போலி இணையதளங்களைக் கண்டறிந்து, அதுகுறித்து காவல் துறையின் இணையவழி குற்றத்தடுப்புப் பிரிவில் நேற்று புகார் அளித்தார்.

    விரைவில் போலி இணையதளங்களை முடக்கி, நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

    கோடை விடுமுறையால் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. வைகுண்டத்தில் உள்ள 9 காத்திருப்பு அறைகளில் ஏழு மலையான் தரிசனத்துக்காக பக்தர்கள் காத்திருந்தனர்.

    அவர்கள் 7மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். நடைபாதை மார்க்கத்தில் வந்த முதல் 20ஆயிரம்(அலிபிரி 14 ஆயிரம், ஸ்ரீவாரி மெட்டு 6 ஆயிரம்) பக்தர்கள் திவ்ய தரிசன டோக்கன் பெற்று ஏழுமலையானைத் தரிசித்தனர்.

    டோக்கனில் குறிப்பிட்ட நேரத்துக்குச் சென்றால் அவர்கள் 2 மணி நேரத்தில் ஏழுமலையானைத் தரிசித்து திரும்பலாம். 20 ஆயிரத்துக்கு மேற்பட்டு வரும் பக்தர்கள் தர்ம தரிசனத்தில் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். #tamilnews
    Next Story
    ×