search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாநில சிறப்பு அந்தஸ்து- சந்திரபாபு நாயுடு நாளை உண்ணாவிரதம்
    X

    மாநில சிறப்பு அந்தஸ்து- சந்திரபாபு நாயுடு நாளை உண்ணாவிரதம்

    ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து கோரியும், மத்திய அரசை கண்டித்தும் முதல்- மந்திரி சந்திரபாபு நாயுடு நாளை உண்ணாவிரதத்தை தொடங்கி வைக்கிறார்.
    நகரி:

    ஆந்திர மாநிலம் இரண்டாக பிரிந்து தெலுங்கானா மாநிலம் உதயமான போது ஆந்திராவுக்கு மாநில சிறப்பு அந்தஸ்து அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

    ஆனால் மத்திய அரசு ஆந்திராவுக்கு மாநில சிறப்பு அந்தஸ்து தர முடியாது. அதற்கு பதிலாக சிறப்பு நிதி அளிக்கப்படும் என்று தெரிவித்தது. அதை ஏற்று கொள்ளாத ஆந்திர மக்கள் மாநில சிறப்பு அந்தஸ்து கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தினார்கள்.

    மத்திய அரசு கூட்டணியில் ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி அங்கம் வகித்தது. அக்கட்சியைச் சேர்ந்த 2 பேர் மத்திய மந்திரிகளாகவும் இருந்தனர்.

    மாநில சிறப்பு அந்தஸ்து தராததால் தெலுங்கு தேசம் கட்சி மத்திய பா.ஜனதா கூட்டணியில் இருந்து விலகியது. 2 மத்திய மந்திரிகளும் ராஜினாமா செய்தனர். அதன் பிறகு முதல்- மந்திரி சந்திரபாபு நாயுடு மத்திய அரசு மீதும், பிரதமர் நரேந்திர மோடி மீதும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். அதற்கு பா.ஜனதாவினரும் பதிலடி கொடுத்தனர்.

    இந்த நிலையில் ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து கோரியும், மத்திய அரசை கண்டித்தும் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு அறிவித்தார்.

    அதன்படி நாளை விஜயவாடாவில் உள்ள இந்தராகாந்தி முனிசிபல் ஸ்டேடியத்தில் சந்திரபாபு நாயுடு காலை 7 மணிக்கு உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி வைக்கிறார். இந்த போராட்டம் இரவு 7 மணி வரை நடக்கிறது.

    உண்ணாவிரதத்திற்கான ஏற்பாடுகளை செய்ய சந்திரபாபு நாயுடு ஒரு கமிட்டியை அமைத்துள்ளார். உண்ணாவிரதத்தில் தெலுங்கு தேசம் கட்சியினர், மாணவர்கள், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் என 1 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனால் ஸ்டேடியத்தில் குவியும் பொதுமக்களுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்யுமாறு சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார்.

    சந்திரபாபு நாயுடுவின் உண்ணாவிரத போராட்டத்தை எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன. இது தொடர்பாக கம்யூனிஸ்டு நாராயணன் கூறும்போது, “மத்திய அரசில் 4 ஆண்டுகளாக கூட்டணியில் இருந்து விட்டு தற்போது சந்திரபாபு நாயுடு உண்ணாவிரதம் இருப்பது போலியானது. மாநில அந்தஸ்து தேவையில்லை. சிறப்பு நிதியே போதும் என்று கூறியவர் இந்த போராட்டத்தை நடத்துகிறார்” என்றார்.
    Next Story
    ×