search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீதித்துறையின் கண்ணியத்தை பாதுகாக்க வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி செல்லமேஸ்வர்
    X

    நீதித்துறையின் கண்ணியத்தை பாதுகாக்க வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி செல்லமேஸ்வர்

    எதிர்கால தலைமுறையினருக்காக நீதித்துறையின் கண்ணியத்தை பாதுகாக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி செல்லமேஸ்வர் பேசினார்.
    நாக்பூர்:

    மராட்டிய மாநிலம், புனே நகரத்தில் நேற்று முன்தினம், சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி செல்லமேஸ்வர், என்.எல். பெல்கார் நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    இங்கே நான் யாரையும் குற்றம்சாட்டுவதற்காக வரவில்லை. ஆனால் எனது பேரக்குழந்தைகள் பற்றி நான் கவலைப்படுகிறேன். எனது பேரக்குழந்தைகள் இந்த நாட்டில் கண்ணியத்துடன் வாழ வேண்டும் என்று நான் விரும்பினால், நீதித்துறையை பாதுகாக்க வேண்டும்; பலப்படுத்த வேண்டும்.

    நாட்டில் உள்ள சமூக பிரச்சினைகளைப் பொறுத்தமட்டில், நீதித்துறை பலம் பொருந்தியதாக, சுதந்திரமானதாக, ஆற்றல் வாய்ந்ததாக, பொறுப்புள்ளதாக இல்லாவிட்டால், யாரும் இந்த நாட்டில் பாதுகாப்புடன் இருந்து விட முடியாது.

    ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும், அவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் எந்த நாட்டினராக இருந்தாலும், அதிகாரம் என்பது மக்களை ஊழல்வாதிகளாக மாற்றி விடுகிறது என்பது வரலாற்று ரீதியிலான உண்மை ஆகும்.

    ஊழல் என்றாலே பணம் சம்பந்தப்பட்ட ஊழல் என்று பொருளாகி விடாது.

    அற்புதமான சட்டங்கள் நாட்டில் இருக்கலாம். ஆனால் அந்த சட்டம் முறையாக அமல்படுத்தப்படாவிட்டால், அதனால் எந்த பயனும் இல்லை.

    நமது நாட்டில் குற்ற வழக்குகளில் தண்டனை விகிதாச்சாரம் வெறும் 5 சதவீதம் மட்டும்தான். இது இரண்டு விஷயங்களை காட்டுகிறது. ஒன்று அபத்தமான வழக்குகளை அரசு தரப்பில் போடுகின்றனர் அல்லது கோர்ட்டுகளில் வழக்குகளை நிரூபிக்கிற ஆற்றல் விசாரணை அமைப்புகளுக்கு இல்லை என்பதாகும். இது ஏன் நடக்கிறது? எப்படி விசாரணை அமைப்புகள் தங்கள் பணியை நிறைவேற்ற தவறுகின்றன?

    இவ்வாறு அவர் பேசினார்.

    மத்திய புலனாய்வு அமைப்பு சி.பி.ஐ.யும், அமலாக்கப்பிரிவு இயக்குனரகமும் மத்தியில் ஆளுகிற கட்சிகளால் தவறாக பயன்படுத்தப்படுவதாகவும் நீதிபதி செல்லமேஸ்வர் சூசகமாக சுட்டிக்காட்டினார்.

    கடந்த ஜனவரி மாதம், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது சரமாரியாக குற்றம் சாட்டி, டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த மூத்த நீதிபதிகளில் செல்லமேஸ்வர் ஒருவர் என்பது நினைவுகூரத்தக்கது.
    Next Story
    ×