search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய சமூக சீர்திருத்தவாதி கமலாதேவி சட்டோபாத்யாயின் பிறந்தநாளை டூடுலால் கொண்டாடும் கூகுள்
    X

    இந்திய சமூக சீர்திருத்தவாதி கமலாதேவி சட்டோபாத்யாயின் பிறந்தநாளை டூடுலால் கொண்டாடும் கூகுள்

    இந்திய பெண்களின் சமூக, பொருளாதார மேம்பாட்டுக்காக உழைத்த கமலாதேவி சட்டோபாத்யாயின் 115-வது பிறந்தநாளை இணையதள தேடுபொறியான கூகுள் சிறப்பு டூடுலின் மூலம் கொண்டாடி வருகிறது. #GoogleDoodle #KamaladeviChattopadhyay
    புதுடெல்லி:

    இந்திய பெண்களின் சமூக, பொருளாதார மேம்பாட்டுக்காக உழைத்த கமலாதேவி சட்டோபாத்யாயின் 115-வது பிறந்தநாளை இணையதள தேடுபொறியான கூகுள் சிறப்பு டூடுலின் மூலம் கொண்டாடி வருகிறது.

    கமலாதேவி சட்டோபாத்யாய் கடந்த 1903-ம் ஆண்டு ஏப்ரல் 3-ம் தேதி மங்களூரில் அவரது பெற்றோருக்கு நான்காவது மகளாகப் பிறந்தார். இவரின் தந்தை ஆனந்தையா தரேஸ்வர் மாவட்ட ஆட்சியராக மங்களூரில் இருந்தார், இவரின் தாயார் பெயர் கிரிஜாபாய் ஆகும்.



    கமலாதேவி படிப்பில் கெட்டிக்காராக இருந்தார் இவரது பெற்றோர்களைப் பார்க்க வீட்டிற்கு வரும் மகாதேவ கோவிந்த ராணடே, கோபாலகிருஷ்ண கோகலே, ராமாபாய் ராணடே, அன்னிபெசண்ட் அம்மையார் போன்ற தலைவர்களின் உரையாடல்களைக் கேட்டு, இளம் வயதிலேயே சுதேச இயக்கத்தில் ஆர்வம் கொண்டார்.

    இவரது இளமைக் காலம் சோகம் நிறைந்ததாக இருந்தது. இவரது முன்மாதிரியாக இருந்த அவரது சகோதரி சகுணா, அவரது இளம் வயதில் திருமணம் முடிந்த உடனேயே, இறந்து போனார். கமலாவின் தந்தை அவருக்கு ஏழு வயதிருக்கும் போதே இறந்தார். இவருக்கு 1917-ல், 14 வயதானபோது திருமணம் நடந்தது ஆனால் இரண்டாண்டுகளில் கணவர் இறந்தார்.

    இதற்கிடையில் கமலா, சென்னை ராணி மேரி கல்லூரியில் தன் படிப்பைத் தொடர்ந்தார். அப்போது சரோஜினி நாயுடுவின் இளைய சகோதரி சுஹாசினி சட்டோபாத்யா அறிமுகமானார். அவர்கள் ஹரிந்திரநாத் சட்டோபாத்யாயை கமலாவுக்கு அறிமுகப்படுத்தினர். ஹரிந்திரநாத் நன்கு அறியப்பட்ட ஒரு கவிஞர் - எழுத்தாளர், நடிகர் போன்ற பன்முகத்தன்மை உடையவராக இருந்தார்.

    கமலாதேவிக்கு இருபது வயது இருக்கும்போது ஹரிந்திரநாத் சட்டோபாத்யாய் உடன் திருமணம் நடந்த்து. இந்த விதவை திருமணத்திற்கு சமூகத்தில் கடுமையாக எதிர்ப்பு இருந்தது. இந்த தம்பதியினரின் ஒரே மகன் ராமா அடுத்த ஆண்டு பிறந்தார். திருமணமான பல ஆண்டுகளுக்கு பிறகு, கமலாதேவியும் அவர் கணவரும் பிரிந்தனர். கமலாதேவி விவாகரத்துக்குப் பெற்றார்.

    அவர்களது திருமணத்திற்கு கொஞ்ச காலத்திற்கு பிறகு ஹரிந்திரநாத் தனது முதல் வெளிநாட்டு பயணத்தை மேற்கோண்டு, லண்டன் சென்றார். ஒரு சில மாதங்கள் கழித்து கமலாதேவி, அங்கு சென்று அவருடன் சேர்ந்தார், அவருடன் சேர்ந்து லண்டன் பல்கலைக்கழகத்தின் பெட்போர்ட் கல்லூரியில் சமூகவியல் பாடத்தில் டிப்ளோமா பட்டம் பெற்றார்.

    கமலாதேவி லண்டனில் இருந்தபோது, இந்தியாவில் மகாத்மா காந்தி, ஒத்துழையாமை இயக்கத்துக்கு 1923இல் அழைப்புவிடுத்ததை அறிந்து இந்தியா திரும்பி, சேவாதளத்தளம் என்னும் காந்திய அமைப்பில் இணைந்தார்.

    இவர் 1926-ல் மார்கரெட் கசின்சு என்பவரை சந்தித்தார். அவரின் தாக்கத்தால் சென்னை மாகாண சட்டசபைக்கு போட்டியிட்டார். இவர்தான் இந்தியாவில் சட்டமன்றத்துக்கு போட்டியிட்ட முதல் பெண் ஆவார். ஆனாலும் இவர் 55 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றார்.

    அடுத்த ஆண்டில், அனைத்திந்திய மகளிர் மாநாடு (AIWC) நிறுவப்பட அதன் முதல் அமைப்புச் செயலாளராக ஆனார். தொடர்ந்து வந்த ஆண்டுகளில், அந்த அமைப்பின் கிளைகள் நாடு முழுவதும் இயங்கத் துவங்கின, தன்னார்வ திட்டங்கள் கொண்டு மதிப்புள்ள தேசிய அமைப்பானது. கமலாதேவி, இந்தியா மட்டுமின்றி ஐரோப்பிய நாடுகளிலும் விரிவாகச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பெண்களுக்கான கல்வி, சமுதாய வளர்ச்சிக்கான திட்டங்கள் முதலியவை குறித்து ஆராய்ந்தார். அதன் பயனாக டெல்லியில் பெண்களுக்கான ஹோம் சயின்ஸ் (Lady Irvin College for Home Science) கல்லூரியை ஆரம்பித்தார்.

    காந்தியடிகளால் 1930-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட உப்பு சத்தியாகிரகக் குழு உறுப்பினர்களான ஏழு பேர்களில் இவரும் ஒருவராக இருந்து மும்பை கடற்கரையில் பெண்கள் பிரிவில் உப்பு சத்தியாக்கிரகம் செய்தார். உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தின்போது சுதேசி உப்பை மும்பை பங்கு சந்தையில் விற்க முயன்றபோது கைது செய்யப்பட்டார். இதற்கு ஓராண்டு கழித்து 1936-ல் காங்கிரஸ் சோசியலிஸ்ட் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    இரண்டாம் உலகப்போர் துவங்கிய காலத்தில் கமலாதேவி இங்கிலாந்தில் இருந்தார். அவர் மற்ற நாடுகளுக்கு இந்தியாவின் பிரதிநிதியாக சென்று இந்திய விடுதலைக்கு ஆதரவைத் திரட்டினார்.

    இந்தியா சுதந்திரமடையும்போது இந்தியா - பாகிஸ்தான் என இரண்டு நாடுகளான பிரிந்தன. இதனையொட்டி நாட்டில் இந்து - முஸ்லீம் கலவரம் ஏற்பட்டது. இக்கலவரத்தில் பல்லாயிரக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டனர். ஏராளமானவர்கள் படுகாயமடைந்தனர். பல லட்சம் இந்துக்களும், முஸ்லீம்களும் அகதிகளாக்கப்பட்டனர். அந்த சமயத்தில் மக்களுக்கு பரிதாபாத் நகரத்தில் சேவை மையம் அமைத்து மருத்துவ உதவி, உணவு, தங்குமிடம் கொடுத்து ஆதரவு அளித்தார்.

    இவ்வாறு மக்கள் மறுவாழ்வுக்கும் அதே சமயம் அவர்கள் இழந்த கைவினைத் தொழிலுக்கு உதவும் பணியினை இரண்டாம் கட்டமாக தொடங்கினார். இந்திய கைவினைப் பொருள்கள் மற்றும் கைத்தறி ஆகியவற்றிற்கு சுதந்திரத்திற்கு பிந்தைய காலத்தில் பெரும் புத்துயிர் அளிக்க வேண்டும் என பொறுப்பெடுத்து நவீன இந்தியாவில் அதன் மிகப்பெரிய மரபை காக்க பாடுபட்டார்.

    அவர் பெற்ற விருதுகள்:
    1955 - பத்ம பூஷண் விருது
    1966 - ராமன் மகசேசே விருது
    1974 - சங்கீத் நாடக அகாடமியின் ரத்னா சத்ஸ்யா விருது
    1977 - கைவினைப் பொருட்களை ஊக்குவிக்கும் இவரது பணிகளுக்காக யுனெஸ்கோ அமைப்பின் விருது
    1987 - பத்ம விபூஷண் விருது
    சாந்தி நிகேதன் அமைப்பும், அதன் மிக உயரிய தேசிகோட்டம்மா விருதை அளித்து இவரைப் பாராட்டியது.

    தனது வாழ்நாளில் 26 நூல்களை எழுதியுள்ள கமலாதேவி சட்டோபாத்யாய் 1988-ம் ஆண்டு அக்டோபர் 29-ம் தேதி தனது 85-வது வயதில் காலமானார். அவரை போற்றும் வகையில் அவரது 115-வது பிறந்தநாளான இன்று அவரது புகைப்படம் கொண்ட ‘டூடுல்’ மூலம் ‘கூகுள்’ கொண்டாடி மகிழ்கிறது. #GoogleDoodle #KamaladeviChattopadhyay #tamilnews
    Next Story
    ×