search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பத்தாம் வகுப்பு கணிதம் மறுதேர்வை எப்போது நடத்துவீர்கள்? - சி.பி.எஸ்.இ.க்கு டெல்லி ஐகோர்ட் கேள்வி
    X

    பத்தாம் வகுப்பு கணிதம் மறுதேர்வை எப்போது நடத்துவீர்கள்? - சி.பி.எஸ்.இ.க்கு டெல்லி ஐகோர்ட் கேள்வி

    கேள்வித்தாள் கசிந்த விவகாரத்தால் அறிவிக்கப்ப்பட்ட பத்தாம் வகுப்பு கணிதப்பாட மறுதேர்வை எப்போது நடத்துவீர்கள்? என சி.பி.எஸ்.இ.க்கு டெல்லி ஐகோர்ட் இன்று கேள்வி எழுப்பியுள்ளது. #CBSEPaperLeaks #delhihighcourt
    புதுடெல்லி:

    மத்திய அரசின் பாடத்திட்டத்துக்கு உட்பட்ட சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வுகள் மார்ச் 5-ம் தேதி தொடங்கியது. 10-ம் வகுப்பு கணிதப் பாடத்திற்கான தேர்வு மார்ச் 28-ம் தேதி நடைபெற்றது. தேர்வு மிக எளிமையாக இருந்ததாக மாணவ-மாணவியர் தெரிவித்தனர்.

    இந்த தேர்வின் கேள்வித்தாள் வாட்ஸ்-ஆப்பில் வெளியானதான புகார் எழுந்தது. அதே போல், கடந்த மாதம் 26-ம் தேதி நடைபெற்ற 12-ம் வகுப்பிற்கான பொருளாதாரவியல் பாடத்தின் கேள்வித்தாளும் வாட்ஸ்-ஆப்பில் வெளியானதாக கூறப்பட்டது.

    இதனால் இந்த இரு பாடங்களுக்கு மறுதேர்வு நடத்த சி.பி.எஸ்.இ. தீர்மானித்தது. இதில் 12-ம் வகுப்பிற்கான பொருளாதாரவியல் பாடத்துக்கான மறுதேர்வு ஏப்ரல் 25-ம் தேதி நடத்தப்படும். 10-ம் வகுப்பு கணிதப் பாடத்திற்கான மறுதேர்வு ஜூலை மாதம் நடைபெறும் என அறிவிப்பு வெளியானது.

    கேள்வித்தாள்கள் முன்கூட்டியே கசிந்த விவகாரத்தில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சிலரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், 10-ம் வகுப்பு கணிதப் பாடத்திற்கான மறுதேர்வு ஜூலை மாதம் நடைபெறும் என்னும் முடிவை எதிர்த்தும் ஏப்ரல் மாதம் முடிவதற்குள் இந்த மறுதேர்வை நடத்த வலியுறுத்தியும் ‘சோஷியல் ஜுரிஸ்ட்’ என்னும் அரசுசாராத தொண்டு நிறுவனத்தின் சார்பில் டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    மறுதேர்வை எழுதும் 12 மற்றும் 10-ம் வகுப்பு மாணவ-மாணவியருக்கு மதிப்பெண்களை தாராளமாக வழங்க வேண்டும். 10 மற்றும் 12-ம் வகுப்பு கேள்வித்தாள்கள் கசிந்த விவகாரத்தில் ஐகோர்ட்டின் மேற்பார்வையில் விசாரிக்கப்பட வேண்டும் எனவும் இந்த மனுவை தாக்கல் செய்த வழக்கறிஞர் அசோக் அகர்வால் வலியுறுத்தி இருந்தார்.

    இந்த மனு டெல்லி ஐகோர்ட் தலைமை நீதிபதி கீதா மிட்டல் மற்றும் நீதிபதி ஹரி சங்கர் ஆகியோர் முன்னர் இன்று விசாரணைக்கு வந்தது.

    சி.பி.எஸ்.இ. சார்பில் ஆஜரான வழக்கறிஞரை பார்த்து சரமாரியான கேள்விகளை நீதிபதிகள் முன்வைத்தனர். வரும் ஜூலை மாதம்வரை தலைக்கு மேல் கத்தி தொங்கி கொண்டிருக்கும் நிலைமைக்கு பத்தாம் வகுப்பு மாணவ - மாணவியர் தள்ளபட வேண்டுமா? இதனால் அவர்களின் ஒரு கல்வியாண்டு வீணடிக்கப்பட வேண்டுமா? என்றும் அவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

    இதற்கு பதில் அளித்த சி.பி.எஸ்.இ. வழக்கறிஞர் பத்தாம் வகுப்பு கணிதம் கேள்வித்தாள்கள் டெல்லி மற்றும் அரியானா மாநிலத்துக்குட்பட்ட பகுதிகளில்தான் கசிந்ததா? அல்லது, நாடு முழுவதும் கசிந்துள்ளதா? என்பதை உறுதிப்படுத்த இயலாத நிலை தற்போது நீடிப்பதால் மறுதேர்வு நடத்தும் தேதி தொடர்பான இறுதி முடிவை எடுப்பதில் குழப்பம் நீடிப்பதாக தெரிவித்தார்.

    இந்த விளக்கத்தை ஏற்றுகொள்ள மறுத்த நீதிபதிகள், 11 மற்றும் 12-ம் வகுப்புக்கு தேர்ச்சி அடைந்து செல்லும் மாணவ-மாணவியர்கள் அடுத்த ஆண்டு முதல் எதை விருப்பப்பாடமாக எடுத்து படிக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்த பத்தாம் வகுப்பு தேர்வுகளின் முடிவுகள்தான் மூலக்காரணமாக அமைகிறது.

    எனவே, மறுதேர்வை விரைவாக நடத்துவது தொடர்பாக ஒரு இறுதி முடிவை எடுத்து வரும் 16-ம் தேதி கோர்ட்டிடம் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். இதுதொடர்பாக சி.பி.எஸ்.இ. கல்வித்துறை மற்றும் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்புமாறும் உத்தரவிட்டுள்ளனர்.
    #CBSEPaperLeaks #delhihighcourt


    Next Story
    ×