search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜிசாட்-6ஏ செயற்கைகோளை இன்று விண்ணில் செலுத்துகிறது இஸ்ரோ
    X

    ஜிசாட்-6ஏ செயற்கைகோளை இன்று விண்ணில் செலுத்துகிறது இஸ்ரோ

    ஜி.எஸ்.எல்.வி.- எப்8 ராக்கெட் மூலம் இன்று மாலை 4.56 மணிக்கு ஜிசாட்-6ஏ செயற்கைக் கோள் இன்று விண்ணில் செலுத்தப்படுகிறது. #ISRO #GSAT6A
    சென்னை:

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தகவல்தொடர்பு வசதிக்காகவும், பருவநிலை மாற்றத்தை அறிவதற்காகவும் ஜிசாட்- 6ஏ என்னும் புதிய செயற்கைகோளை வடிவமைத்து இருக்கிறது.

    இதை இஸ்ரோ, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து இன்று (வியாழக்கிழமை) மாலை 4.56 மணிக்கு, ஜி.எஸ்.எல்.வி.- எப்8 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்துகிறது.



    3 நிலைகளை கொண்ட ஜி.எஸ்.எல்.வி- எப்8 ராக்கெட்டில் முதல் நிலையில் திட எரிபொருளும், 2-ம் நிலையில் திரவ எரிபொருளும் நிரப்பப்பட்டு உள்ளது. 3-வது நிலையில் முழுவதும் உள்நாட்டில் இந்திய விஞ்ஞானிகளால் வடிவமைக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜின் பொருத்தப்பட்டு உள்ளது. இந்த ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான இறுதிகட்ட பணியான 27 மணிநேர ‘கவுண்ட்டவுன்’ நேற்று பகல் 1.56 மணிக்கு தொடங்கியது. தொடர்ந்து விஞ்ஞானிகள் ராக்கெட்டை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    ஜி.எஸ்.எல்.வி.- எப்8 ராக்கெட் 49.1 மீட்டர் உயரமும், 415.6 டன் எடையும் கொண்டது ஆகும். இதில் 2,140 கிலோ எடை கொண்ட ஜிசாட்- 6ஏ செயற்கைகோள் அனுப்பப்படுகிறது. இது, பூமியில் இருந்து அதிகபட்சமாக 36 ஆயிரம் கிலோ மீட்டர் தூரமும், குறைந்தபட்சமாக 170 கிலோ மீட்டர் தூரமும் கொண்ட சுற்றுப்பாதையில் பூமியைச் சுற்றிவர இருக்கிறது.

    ஜிசாட்- 6ஏ செயற்கைகோளின் ஆயுட்காலம் 10 ஆண்டுகள் ஆகும். அகமதாபாத்தில் உள்ள இஸ்ரோ மையத்தில் ‘எஸ்.பேண்ட்’ தகவல்தொடர்பு வசதிக்காக 6 மீட்டர் விட்டத்தில் மிகப்பெரிய ‘ஆன்டெனா’ ஒன்றும் தயாரிக்கப்பட்டு செயற்கைகோளில் பொருத்தப்பட்டு உள்ளது. இஸ்ரோ தயாரித்த ‘ஆன்டெனா’க்களிலேயே இது மிகவும் பெரியதாகும். செல்போன் மற்றும் அதற்கு சிறிய மின்னணு சாதனங்களில் இருந்து அனுப்பப்படும் சிக்னல்களையும் முழுமையாக பெற்று தரும் வசதியை இந்த ‘ஆன்டெனா’ ஏற்படுத்தி தரும்.

    மேலும் தகவல் தொடர்பு மற்றும் காலநிலை மாற்றங்களை முன்கூட்டியே அறிந்துகொள்ள இந்த செயற்கைகோள் பேருதவியாக அமையும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.  #ISRO #GSAT6A
    Next Story
    ×