search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கல்வி, வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு பெற எஸ்.சி., எஸ்.டி. இனத்தவருக்கு வருமான உச்சவரம்பு கொண்டுவர முடியாது
    X

    கல்வி, வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு பெற எஸ்.சி., எஸ்.டி. இனத்தவருக்கு வருமான உச்சவரம்பு கொண்டுவர முடியாது

    கல்வி, வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு பலன்களைப் பெற எஸ்.சி., எஸ்.டி. இனத்தவருக்கு வருமான உச்சவரம்பு கொண்டுவர முடியாது என சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு அறிவித்தது.
    புதுடெல்லி:

    சுப்ரீம் கோர்ட்டில் சம்தா அந்தோலன் சமிதி என்னும் தன்னார்வ தொண்டு அமைப்பு ஒரு பொது நல வழக்கை தாக்கல் செய்தது.

    அந்த வழக்கின் சாராம்சம், ‘வசதி படைத்த எஸ்.சி., எஸ்.டி. இனத்தவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு தேவை இல்லை. அவர்களுக்கு அப்படி வழங்குவது, அந்த சமூகத்தில் உள்ள ஏழைகளுக்கு இடஒதுக்கீட்டின் பலனை அடைவதில் தடையாக அமைந்து விடுகிறது. எனவே வசதி படைத்த தாழ்த்தப்பட்டோர், பழங்குடி இனத்தவர்களுக்கு இட ஒதுக்கீட்டின் பலனை வழங்கக் கூடாது’ என்பதாகும்.

    மேலும், ‘எஸ்.சி., எஸ்.டி. இனத்தவர்களுக்கான இடஒதுக்கீட்டின் பலன், உண்மையிலேயே யாருக்கு தேவைப்படுகிறதோ அவர்களுக்கு போய்ச்சேருவதில்லை. இந்த இனத்தவர்களுக்கு கிரிமிலேயர் என்னும் வருமான உச்சவரம்பு கொள்கை இல்லாததுதான் இதற்கு காரணம். இடஒதுக்கீட்டின் பலன்களில் 95 சதவீதத்தை வசதி படைத்தவர்கள் பறித்து சென்று விடுகின்றனர்’ என சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.

    இந்த வழக்கை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு நேற்று விசாரித்தது.

    வழக்குதாரர் சார்பில் வக்கீல் கோபால் சங்கரநாராயணன் ஆஜராகி வாதாடினார். அவர், “எஸ்.சி., எஸ்.டி. இனத்தவர்களுக்கு கிரிமிலேயர் இல்லாததால், வசதி படைத்தவர்களும் இட ஒதுக்கீட்டின் பலனை பெறுவதால், அந்த இனங்களில் உள்ள ஏழை, எளியோர் பாதிக்கப்படுகின்றனர். இந்த பிரச்சினையை அந்த சமூகத்தினர்தான் எழுப்புகின்றனர்” என கூறினார்.

    மத்திய அரசின் சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் பி.எஸ்.நரசிம்மா ஆஜராகி வாதாடும்போது, “எஸ்.சி., எஸ்.டி. இனத்தவர்களைப் பொறுத்தமட்டில் அவர்களுக்கு கிரிமிலேயர் கொண்டுவர முடியாது. ஒட்டுமொத்த இனத்தவரும் பின்தங்கிய நிலையில்தான் உள்ளனர்” என கூறினார்.

    அதைத் தொடர்ந்து இந்த வழக்கில் மத்திய அரசு 4 வாரங்களில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    வழக்கின் இறுதி விசாரணையை, ஜூலை மாதம் 2-வது வாரத்துக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். 
    Next Story
    ×