search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விஜய் மல்லையாவின் சொத்துகள் பறிமுதல் - பெங்களூரு போலீஸ் கமிஷனருக்கு டெல்லி கோர்ட் உத்தரவு
    X

    விஜய் மல்லையாவின் சொத்துகள் பறிமுதல் - பெங்களூரு போலீஸ் கமிஷனருக்கு டெல்லி கோர்ட் உத்தரவு

    வெளிநாட்டுக்கு தப்பிச் சென்ற பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவின் சொத்துகளை பறிமுதல் செய்யுமாறு பெங்களூரு போலீஸ் கமிஷனருக்கு டெல்லி கோர்ட் இன்று உத்தரவிட்டது.
    புதுடெல்லி:

    வெளிநாட்டுக்கு தப்பிச் சென்ற பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவின் சொத்துகளை பறிமுதல் செய்யுமாறு பெங்களூரு போலீஸ் கமிஷனருக்கு டெல்லி கோர்ட் இன்று உத்தரவிட்டது.

    இந்தியாவில் உள்ள பல்வேறு வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் பெற்று மோசடி செய்துள்ள பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையாவுக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் நடைபெற்று வருகின்றன. இதுதொடர்பாக அவருக்கு கைது வாரண்டுகளும், ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்டுகளும் பிறப்பிக்கப்பட்டு உள்ளன.

    இந்த கடன் மோசடி தொடர்பாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதன் அடிப்படையில் அமலாக்க பிரிவினரும் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மல்லையாவுக்கு எதிராக செக் மோசடி வழக்குகளும் நிலுவையில் உள்ளன. தற்போது லண்டனில் தஞ்சம் அடைந்துள்ள விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு வரும் நடவடிக்கையில் இந்திய அரசு ஈடுபட்டு வருகிறது.

    இந்திய பொருளாதார அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ. ஆகியவை ஒன்றாக இணைந்து லண்டன் நகரில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் விஜய் மல்லையாவுக்கு எதிராக சுமார் 150 பக்கங்களை கொண்ட  ஆவணங்களை தாக்கல் செய்தன.

    விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது தொடர்பாக இந்திய அரசு லண்டன் வெஸ்ட்மின்ஸ்ட்டர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் தொடர்ந்துள்ள வழக்கு விசாரணை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 4-ம் தேதி தொடங்கி, நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், விஜய் மல்லையாவின் சொத்துகளை கையகப்படுத்த வேண்டும் என டெல்லி பெருநகர தலைமை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் பொருளாதார அமல்லாக்கத்துறை இயக்குனரகம் மனு செய்து இருந்தது.

    இந்த வழக்கை இன்று விசாரித்த டெல்லி பெருநகர தலைமை மாஜிஸ்திரேட் தீபக் ஷெராவத், விஜய் மல்லையாவின் சொத்துகளை பறிமுதல் செய்யுமாறு பெங்களூரு நகர போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிட்டார்.

    கோர்ட்டின் உத்தரவை நிறைவேற்றிய விபரங்கள் தொடர்பாக மே மாதம் 8-ம் தேதி கோர்ட்டில் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார். #tamilnews
    Next Story
    ×