search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லியில் தமிழக விவசாயிகள் இன்று முதல் தொடர் போராட்டம்
    X

    டெல்லியில் தமிழக விவசாயிகள் இன்று முதல் தொடர் போராட்டம்

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி டெல்லி பாராளுமன்ற சாலையில் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்கள்.
    புதுடெல்லி:

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், விவசாயிகள் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர்மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் கடந்த ஏப்ரல் மாதம் 41 நாட்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மத்திய அமைச்சர்கள், தமிழக முதலமைச்சர் உறுதியை ஏற்று போராட்டத்தை வாபஸ் பெற்றனர். இந்த நிலையில் காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வார காலத்திற்குள் அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதற்கான காலக்கெடு வருகிற 29-ந்தேதி முடிகிறது. இனியும் காலம் தாழ்த்தாமல் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்று போராட்டங்களும் நடந்து வருகின்றன.

    இதே கோரிக்கையை வலியுறுத்தி தமிழக அ.தி.மு.க. எம்.பி.க்கள் பாராளுமன்ற கூட்டத்தை புறக்கணித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனாலும் மத்திய அரசு தொடர்ந்து இந்த பிரச்சனையில் மவுனம் காத்து வருகிறது.

    இந்த நிலையில் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்திற்கு பதிலாக 9 பேர் கொண்ட காவிரி மேற்பார்வை குழுவை அமைக்க முடிவு செய்துள்ளது.

    இதற்கு தமிழக அனைத்து கட்சிகள் மற்றும் விவசாய சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை தவிர்க்கவே மத்திய அரசு புதிய குழுவை அமைக்க உள்ளதாக தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் விமர்சித்துள்ளனர்.

    இந்த பிரச்சனை தொடர்பாக தமிழக முதலமைச்சர் அனைத்து கட்சி தலைவர்களை டெல்லி அழைத்து சென்று பிரதமர், ஜனாதிபதி, நீர்வளத்துறை அமைச்சர் ஆகியோரை சந்திக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.

    இந்த நிலையில் தமிழக அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்பு சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் 150 விவசாயிகள் டெல்லி சென்றுள்ளனர். முழு அதிகாரம் கொண்ட காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனே அமைக்க வலியுறுத்தி அங்கு இன்று முதல் போராட்டத்தில் ஈடுபடுகிறர்கள்.

    இதற்காக நேற்று முன்தினம் 150 விவசாயிகள் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றனர். இன்று காலை டெல்லி பாராளுமன்ற சாலையில் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்கள்.

    தமிழக விவசாயிகளின் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து டெல்லி விவசாயிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர்.

    அடுத்தடுத்து தொடர்ந்து விவசாயிகள் கோரிக்கை நிறைவேறும் வரை பிரதமர் வீடு முற்றுகை, பாரா ளுமன்றம் முற்றுகை, ஜனாதிபதி மாளிகை முற்றுகை என தினமும் நூதன போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதனால் டெல்லி பாராளுமன்ற சாலை மீண்டும் பரபரப்பானதாக மாறியுள்ளது. அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். #Tamilnews
    Next Story
    ×