search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    5 தென் மாநிலங்களை கைப்பற்ற பா.ஜனதா அதிரடி வியூகம்- தெலுங்கு நடிகர்
    X

    5 தென் மாநிலங்களை கைப்பற்ற பா.ஜனதா அதிரடி வியூகம்- தெலுங்கு நடிகர்

    5 தென் மாநிலங்களை கைப்பற்ற பா.ஜனதா அதிரடி வியூகம் வகுத்துள்ளதாக தெலுங்கு நடிகர் தகவல் கூறியுள்ளார். #BJP

    நகரி:

    பிரபல தெலுங்கு நடிகர் சிவாஜி. இவர் தமிழில் ‘காதல் சுகமானது’ என்ற படத்தில் நடித்துள்ளார். ஏராளமான தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார், சில படங்களை தயாரித்துள்ளார்.

    ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்டபோது நடந்த போராட்டங்களில், மாநிலத்தைப் பிரிக்கக் கூடாது என குரல் கொடுத்தார். பாஜகவில் சேர்ந்து, மாநிலத்தை பிரித்த காங்கிரசை கடுமையாக விமர்சித்து வந்தார். சில மாதங்களாக அவர் எந்த கட்சியிலும் இல்லாமல் சமூக பிரச்சினைகளை மட்டும் சமூகவலைதளங்களில் சுட்டிக் காட்டி வருகிறார்.

    இந்நிலையில் இவர், விஜயவாடாவில் நிருபர்களை சந்தித்து ஒரு வீடியோவை வெளியிட்டு பேசியதாவது:-

    பா.ஜனதா கட்சி, வரும் 2019-ல் நடைபெற உள்ள பாராளுமன்ற மற்றும் சில மாநிலங்களின் சட்டசபை தேர்தலில், தென் இந்தியாவில் காலூன்ற பல சதிகளைச் செய்து வருகிறது. இந்த சதி திட்டத்துக்கு‘ஆபரே‌ஷன் திராவிடம்’ என பெயர் சூட்டியுள்ளது.

    தமிழகம், கேரளாவுக்கு ‘ஆபரே‌ஷன் ராவணா’, ஆந்திரா, தெலுங்கானாவுக்கு ‘ஆபரே‌ஷன் கருடா’ கர்நாடகத்துக்கு ‘ஆபரே‌ஷன் குமாரா’ என அந்த தேசிய கட்சி பெயர் சூட்டி உள்ளது.

    இந்த அரசியல் ஆபரேஷன்களை நடத்த ‘ஸ்லீப்பர் செல்’ எனப்படும் ரகசிய நபர்கள் மூலம் அந்த கட்சி, கடந்த 2017-ம் ஆண்டு முதலே அரசியல் காய்களை நகர்த்த தொடங்கிவிட்டது.

    இதனால் அந்த மாநிலங்களில் உள்ள கட்சிகளில் உட்பூசல் ஏற்படும். பலர் தாய் கட்சிகளில் இருந்து வெளியேறுவார்கள். பலர் புதிய கட்சிகளை தொடங்குவார்கள். மக்களைக் குழப்பும் பல தகவல்களை சமூக வலைதளங்கள் மூலம் பரப்புவார்கள். இதற்கென தனி அமைப்பையே அந்த தேசிய கட்சி உருவாக்கி உள்ளது.

    அரசியல் ஆபரே‌ஷனை வெற்றிகரமாக நடத்தி முடிக்க ரூ. 4,800 கோடியை அந்த கட்சி ஒதுக்கி செலவிட்டு வருகிறது. சிலர் பணத்துக்காகவும், பதவிகளுக்காகவும் சக்கர வியூகத்தில் விழுந்து பலியாக உள்ளனர்.

    முதல்வர் சந்திரபாபு நாயுடு மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் பல வழக்குகள் பதிவாகும். ஒரு கட்டத்தில் சிபிஐ விசாரணைக்கு கூட உத்தரவிடப்படும். இதன் மூலம் தெலுங்கு தேசம் கட்சிக்கு அவப்பெயரை உருவாக்க அந்த தேசிய கட்சி திட்டம் தீட்டியுள்ளது. சந்திரபாபு நாயுடுவை பொருளாதார ரீதியாகவும் நிலை குலைய செய்யவும் திட்டம் தீட்டப்பட்டுள்ளது.

    புதிதாக கட்சி தொடங்கி, தேர்தலை சந்திக்காத ஒரு கட்சி தலைவரையும் தேசிய கட்சி விட்டு வைக்க வில்லை. அவர் விரைவில் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்குவார். இதற்கு அடிபணிந்தது போல், தேசிய கட்சி ஒரு சிறப்பு நிதியை ஆந்திராவுக்கு வழங்கும்.

    அந்த தலைவரை உபயோகப்படுத்தி கொண்டு அடுத்த தேர்தலில் அவருக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்க பேரமும் பேசப்பட்டுள்ளது. இறுதியில், சட்டசபை தேர்தல் நடந்த பின்னர், தற்போதைய எதிர்க்கட்சி, புதிய கட்சியுடன் இணைந்து தனது கட்சியை சேர்ந்த ஒரு மூத்த அரசியல்வாதியை ஆந்திராவின் முதல்வராக நியமிக்கும்.

    கடந்த 6 மாதங்களாக நான் டெல்லியில் தங்கி இருந்தபோது, அந்த ஸ்லீப்பர் செல்லில் உள்ளவர்களில் ஒருவர் இந்த தகவல்களை எனக்கு தெரிவித்தார். ஆனால், இப்போதும்கூட நான் இதனை தெரிவிக்காவிட்டால், ஆந்திர மக்கள் என்னை மன்னிக்க மாட்டார்கள்.

    பொதுமக்கள் ‘அந்த’ தேசிய கட்சியின் சதியில் விழாமல் விழித்துக்கொள்ள வேண்டும்.

    தமிழ்நாட்டில் ஒரு நடிக ருக்கு முதல்-அமைச்சர் ஆசைகாட்டி அதன் மூலம் ஆட்சியை தன் கைவசப் படுத்த முயற்சி மேற் கொண்டு வருகிறது. கர்நாடகா, கேரளாவிலும் புதிய புதிய தலைவர்களை உருவாக்கி தன் கைக்குள் கொண்டு வர முயற்சி மேற் கொண்டுள்ளது.

    தெலுங்கானாவில் ஆளும் கட்சியுடன் கூட்டணி அமைத்து அதையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடிவு செய்துள்ளது.

    இவ்வாறு நடிகர் சிவாஜி கூறினார்.

    இது குறித்து ஆந்திரா, தெலுங்கானா அரசியலில் பெரும் விவாதம் நடை பெற்று வருகிறது. தெலுங்கு ஊடகங்களில் விவாத நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

    இதுகுறித்து தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள், எம்.எல். ஏக்கள், எம்.பிக்கள் கூறும் போது, “அந்த தேசிய கட்சியின் அரசியல் விளையாட்டை ஆந்திராவில் அரங்கேற்ற விட மாட்டோம்” என தெரிவித்துள்ளனர். #BJP #tamilnews

    Next Story
    ×