search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஹீரோ நிறுவனத்தின் புதிய மோட்டார் சைக்கிள் தொழிற்சாலை: சந்திரபாபு நாயுடு அடிக்கல் நாட்டினார்
    X

    ஹீரோ நிறுவனத்தின் புதிய மோட்டார் சைக்கிள் தொழிற்சாலை: சந்திரபாபு நாயுடு அடிக்கல் நாட்டினார்

    தமிழக எல்லைக்கு அருகில் ஆந்திர மாநிலத்தில் ஹீரோ மோட்டார் நிறுவனம் தொடங்க இருக்கும் புதிய மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர் தொழிற்சாலைக்கு ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு அடிக்கல் நாட்டினார்.
    சென்னை:

    ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் ஸ்ரீசிட்டி என்ற ஊரில் மிகப்பெரிய தொழிற்சாலைகளை ஆந்திர அரசாங்கம் அமைத்து வருகிறது. நேற்று இந்த ஊரில் மேலும் ஒரு பெரிய தொழிற்சாலைக்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது.

    உலகில் மிகப்பெரிய இரு சக்கர வாகன உற்பத்தியாளர்களான ஹீரோ மோட்டார் கம்பெனி (ஹீரோ மோட்டோ கார்ப்) ஸ்ரீசிட்டியில் 600 ஏக்கர் நிலப்பரப்பில் பிரமாண்டமான மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர் உற்பத்தி தொழிற்சாலையை அமைக்கிறது. ரூ.1,600 கோடி முதலீட்டில் அமைய இருக்கும் இந்த தொழிற்சாலையில், ஆண்டுக்கு 18 லட்சம் மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர் உற்பத்தி செய்யும் திறன் இருக்கிறது. கட்டிடப்பணிகள் மிகவேகமாக முடிக்கப்பட்டு, அடுத்த ஆண்டு இறுதிக்குள் உற்பத்தியை தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இந்த புதிய தொழிற்சாலையில் 2 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டு, மேலும் 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உருவாக்கப்படும். இந்த தொழிற்சாலைக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, இந்த நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் பவன் முஞ்சால் ஆகியோர் புதிய தொழிற்சாலைக்கான அடிக்கல்லை நாட்டினர்.

    இந்த தொழிற்சாலை சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் அமைக்கப்படுகிறது. ஹீரோ மோட்டார் நிறுவனத்தின் 8-வது தொழிற்சாலை இந்த தொழிற்சாலையாகும். இந்தியாவில் ஏற்கனவே 5 தொழிற்சாலைகள் இருக்கின்றன. கொலம்பியாவிலும், வங்காளதேசத்திலும் மேலும் 2 தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.

    இந்த தொழிற்சாலை வருவது குறித்து முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு வெளியிட்டுள்ள அறிக்கையில், பெரிய நிறுவனங்களின் முதலீட்டு இடமாக ஆந்திரா விளங்கி வருவதை மீண்டும் இந்த நிறுவனம் தொழிற்சாலை தொடங்குவதன் மூலமாக நிரூபிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

    சமீபகாலங்களாக பல தொழிற்சாலைகள் தமிழ்நாட்டில் தொடங்கப்படாமல், ஆந்திரா செல்வது நிச்சயமாக கவலைக்குரியதாக இருக்கிறது என்று சமூக ஆர்வலர் ஒருவர் தெரிவித்தார். #tamilnews
    Next Story
    ×