search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய தேர்தலில் தலையிட்டால் கடும் நடவடிக்கை - மத்திய மந்திரி எச்சரிக்கை
    X

    இந்திய தேர்தலில் தலையிட்டால் கடும் நடவடிக்கை - மத்திய மந்திரி எச்சரிக்கை

    இந்திய தேர்தலில் தலையிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் முகநூல் சமூக வலைத்தளத்துக்கு எச்சரிக்கை விடுத்தார்.
    புதுடெல்லி:

    முகநூல்(பேஸ்புக்) சமூக வலைத்தளத்தை பயன்படுத்தும் 220 கோடி பேரில் 5 கோடி பேரை பற்றிய தகவல்கள் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளில் செயல்பட்டு வரும் ‘கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா’ என்ற அரசியல் பிரசார நிறுவனத்திடம் பகிர்ந்து கொள்ளப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது உலகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.

    இதில் இந்தியர்கள் உள்பட பல்வேறு நாடுகளின் முகநூல் பயன்பாட்டாளர்களின் தகவல்களும் பகிர்ந்து கொள்ளப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

    இந்தநிலையில் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா நிறுவனத்தின் உதவியை அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு இந்திய அரசியல் கட்சி ஒன்று பயன்படுத்திக் கொள்ளப்போவதாகவும் ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது.

    இதுபற்றி மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

    சுதந்திரமான எழுத்து, பேச்சு, கருத்துகளை சமூக வலைத்தளங்கள் வெளியிடுவதற்கு மத்திய அரசு எப்போதும் தனது ஆதரவை அளிக்கும்.

    அதேநேரம், இந்திய தேர்தலில் தலையிட்டு அதிகாரம் செலுத்த முயன்றால் அதை ஒரு போதும் சகித்துக் கொள்ள மாட்டோம். தேவைப்படும் பட்சத்தில் முகநூல் உள்ளிட்ட எந்தவொரு சமூக ஊடகம் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு தயங்காது. ஏனென்றால் முகநூல் வலைத்தளம் இந்தியாவில் மட்டும் 20 கோடி பயன்பாட்டாளர்களைக் கொண்டு உள்ளது.

    குற்றச்சாட்டுக்கு ஆளா கியுள்ள சம்பந்தப்பட்ட கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா பாலியல் பிரச்சினை, ஒழுக்கமற்ற செயல்பாடுகள், போலி செய்திகளை பயன்படுத்தி பல்வேறு நாடுகளில் பொதுத் தேர்தலை சீர்குலைத்திருப்பதாக குற்றச்சாட்டு கூறப்பட்டு உள்ளது. இத்தகைய ஒரு நிறுவனத்துடன்தான் காங்கிரஸ் தொடர்பு கொண்டு இருக்கிறது.

    இதுபோல் திருடப்பட்ட தகவல்களை வெளியிட்டுத்தான் காங்கிரஸ் அடுத்த ஆண்டு பொதுத் தேர்தலை சந்திக்க விரும்புகிறதா வாக்காளர்களை கவருவதற்கு இதே பாதையில்தான் செல்லப்போகிறதா?...

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மணிஷ் திவாரி நேற்று காலை தனது டுவிட்டர் பதிவில், கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா நிறுவனத்துடன் தொடர்பு கொண்டிருக்கும் இந்திய அரசியல் கட்சி எது என்பது பற்றி தேர்தல் கமிஷன் விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

    அவர் வேண்டுகோள் விடுத்த அடுத்த சில மணி நேரங்களில் மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் காங்கிரஸ் மீது குற்றம் சாட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது. 
    Next Story
    ×