search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எம்.பி.க்கள் அமளியால் 13-வது நாளாக முடங்கியது பாராளுமன்றம்- நாள் முழுவதும் ஒத்திவைப்பு
    X

    எம்.பி.க்கள் அமளியால் 13-வது நாளாக முடங்கியது பாராளுமன்றம்- நாள் முழுவதும் ஒத்திவைப்பு

    பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக 13-வது நாளாக இன்றும் பணிகள் முடங்கின. பாராளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் அமர்வு கடந்த 5-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத் தொடரில், காவிரி மேலாண்மை வாரியம், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து, பி.என்.பி. வங்கி மோசடி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை முன்வைத்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டு வருவதால், அவை நடவடிக்கை தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளது. சில மணிநேரம் கூட நடைபெறாமல் இரு அவைகளும் முடங்கி உள்ளன.

    ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் பிரச்சனையில், மோடி அரசுக்கு எதிராக இல்லா தீர்மானம் கொண்டு வர நோட்டீஸ்கள் அளிக்கப்பட்டுள்ளன. ஆனால், அவையில் அமளி நீடிப்பதால் நம்பிக்கையில்லா தீர்மானத்தை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள முடியாது என சபாநாயகர் கூறிவிட்டார்.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில் பாராளுமன்றம் இன்று காலை 11 மணிக்கு மீண்டும் கூடியது. அப்போது இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.


    மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. 12 மணிக்கு மக்களவை கூடியபோதும் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டு அவை நடவடிக்கைகளை முடக்கினர். அப்போது பேசிய பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி அனந்த் குமார் அவையை சுமூகமாக மந்திரிகள் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். நம்பிக்கையில்லா தீர்மானம் உள்ளிட்ட அனைத்து விவகாரங்கள் குறித்தும் விவாதிக்க அரசு தயாராக இருப்பதாக எதிர்க்கட்சி எம்.பி.க்களிடம் தெரிவித்தார். அத்துடன், பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் அரசுக்கு போதிய ஆதரவு உள்ளதாகவும் கூறினார்.

    எனினும் எம்.பி.க்கள் தங்கள் நிலைப்பாட்டில் இருந்து சற்றும் விலகவில்லை. கூச்சல் குழப்பம் அதிகரித்ததையடுத்து, அவையை நாள் முழுவதும் ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார். இதன் மூலம் 13-வது நாளாக பாராளுமன்றம் முடங்கி உள்ளது. #Tamilnews
    Next Story
    ×