search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆம்புலன்ஸ் டாக்டராக நடித்த ஏ.சி. மெக்கானிக் மெத்தனத்தால் சிறுவன் பலி
    X

    ஆம்புலன்ஸ் டாக்டராக நடித்த ஏ.சி. மெக்கானிக் மெத்தனத்தால் சிறுவன் பலி

    மேற்கு வங்காளத்தில் ஆம்புலன்ஸ் டாக்டராக நடித்த ஏ.சி. மெக்கானிக்கின் மெத்தனத்தால் 16 வயது சிறுவன் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தார் புகார் அளித்துள்ளனர்.
    கொல்கத்தா:

    மேற்கு வங்காளம் மாநிலம், பிர்பம் மாவட்டத்தை சேர்ந்த அரிஜித்(16) என்பவனுக்கு கடந்த பத்தாம் தேதியில் இருந்து கடுமையான காய்ச்சல் இருந்து வந்துள்ளது. 11-ம் தேதி பள்ளி ஆண்டிறுதி தேர்வு உள்ள நிலையில் முந்தைய நாள் மகன் காய்ச்சலுக்குள்ளானதை அறிந்த பெற்றோர் வேதனையில் ஆழ்ந்தனர்.

    இதையடுத்து, அரிஜித்தின் தந்தை ரஞ்சித் தாஸ் அருகாமையிலுள்ள பர்த்வான் மாவட்டத்தில் உள்ள அன்னப்பூரணா மருத்துவமனையில் மகனை சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு சில நாட்களாக அளிக்கப்பட்ட சிகிச்சையால் பலன் கிடைக்காததால், மேல் சிகிச்சைக்காக தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ரவிந்திரநாத் தாகூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல குடும்பத்தார் தீர்மானித்தனர்.

    இதற்காக, பர்த்வானில் இருந்த சுமார் 100 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கொல்கத்தா நகருக்கு அரிஜித்தை ஆம்புலன்சில் கொண்டு செல்ல கடந்த 16-ம் தேதி ஏற்பாடு செய்த அன்னப்பூரணா மருத்துவமனை நிர்வாகம், அதற்கு வாடகையாக 16 ஆயிரம் ரூபாய் கேட்டுள்ளது. இதில் 8 ஆயிரம் ரூபாயை பெற்றுகொண்ட பின்னர் ஆம்புலன்சில் அரிஜித்தை மட்டும் ஏற்றிகொண்டு அந்த ஆம்புலன்ஸ் வாகனம் கொல்கத்தா நோக்கி புறப்பட்டது.

    ஆனால், அந்த ஆம்புலன்சில் டாக்டருக்கு பதிலாக பணியில் இருந்த ஏ.சி. மெக்கானிக் ஒருவர் மிகவும் மோசமான நிலையில் உள்ள நோயாளிக்கு உயிர்காக்கும் முதலுதவி அளிக்க தேவையான உபகரணங்களை சரியான முறையில் இயக்கத் தெரியாமல் திணறியுள்ளார்.

    இந்நிலையில், அந்த ஆம்புலன்ஸ் கொல்கத்தா நகரில் உள்ள ரவிந்திரநாத் தாகூர் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தது. வாகனத்தில் இருந்து கீழே இறக்கப்பட்ட அரிஜித்தை பரிசோதித்த டாக்டர்கள் ஆம்புலன்சில் வரும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதனால், வேதனை அடைந்த உறவினர்கள் ஆம்புலன்சில் வந்த டாக்டரை முற்றுகையிட்டபோது, அவர் டாக்டர் அல்ல ஏ.சி. மெக்கானிக் என்பது தெரியவந்தது.

    இச்சம்பவம் தொடர்பாக அரிஜித்தின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் ஆள்மாறாட்டம், மோசடி, அலட்சியத்தால் உயிரிழப்புக்கு காரணமாக இருந்தது உள்ளிட்ட குற்றப்பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

    ஆம்புலன்ஸ் டிரைவர் தாரா பாபு ஷா, டாக்டர்போல் நடித்த ஏ.சி. மெக்கானிக் ஷேக் சர்பராஹுதீன் ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். #tamilnews
    Next Story
    ×