search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாக்குச்சீட்டு முறைக்கு மாறுவது பிற்போக்குத்தனம் - முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கருத்து
    X

    வாக்குச்சீட்டு முறைக்கு மாறுவது பிற்போக்குத்தனம் - முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கருத்து

    மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் முற்றிலும் நம்பகமானவை. அதனால், மீண்டும் வாக்குச்சீட்டு முறைக்கு மாறுவது பிற்போக்குத்தனமானது என்று முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி கூறினார்.
    ஐதராபாத்:

    தற்போது, அனைத்து தேர்தல்களிலும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், அவற்றில் முறைகேடுகள் நிகழ்த்த முடியும் என்ற சந்தேகம் நிலவுவதால், மீண்டும் வாக்குச்சீட்டு முறையில் தேர்தல்களை நடத்த வேண்டும் என்று சமீபத்தில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

    வேறு சில அரசியல் கட்சிகளும் இதே கோரிக்கையை எழுப்பி வருகின்றன. இதுபற்றி அனைத்து கட்சிகளிடையே கருத்து ஒற்றுமை ஏற்பட்டால், அது பரிசீலிக்கப்படும் என்று பா.ஜனதா தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி கருத்து தெரிவித்துள்ளார். ஒரு செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-



    என்னைப் பொறுத்தவரை, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் முற்றிலும் நம்பகமானவை. அவற்றை பயன்படுத்தும் நமது தேர்தல் முறையை பல நாடுகள் பாராட்டி உள்ளன. அவை நமது தேசத்தின் கவுரவம்.

    சில கட்சிகளுக்கு வெற்றி கிடைக்கவில்லை என்பதற்காக, எந்திரங்கள் மோசமானவை என்று அர்த்தம் அல்ல.

    மீண்டும் வாக்குச்சீட்டு முறையை கொண்டுவர வேண்டும் என்று சில கட்சிகள் கேட்பது துரதிருஷ்டவசமானது. அந்த முறைக்கு மாறுவது பிற்போக்குத்தனமான நடவடிக்கை ஆகும். வாக்குச்சீட்டு முறையில்தான் எளிதில் முறைகேடுகள் நிகழ்த்த முடியும். சில தேர்தல்களில், போலி வாக்குச்சீட்டு பயன்படுத்தப்பட்டதையும் நாம் பார்த்துள்ளோம்.

    எந்திரங்களில் உள்ள தடுப்பு முறைகள், வாக்குச்சீட்டு முறையில் கிடையாது. மேலும், வாக்குச்சீட்டு முறையினால், நிறைய காகிதம் வீணாகும். தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு ஒரு வாரம் கூட ஆகிவிடும். செல்லாத ஓட்டுகள் அதிகமாக போடப்படும் வாய்ப்பும் உள்ளது. இவைபோன்ற பாதகங்கள் உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×