search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பா.ஜ.க. அரசு மக்களை வறுமையில் தள்ளிவிட்டது- ப. சிதம்பரம்
    X

    பா.ஜ.க. அரசு மக்களை வறுமையில் தள்ளிவிட்டது- ப. சிதம்பரம்

    மோடி அரசு மக்களை முன்னேற்றுவதற்கு பதிலாக வறுமையில் தள்ளி இருக்கிறது என முன்னாள் மத்திய மந்திரி ப. சிதம்பரம் கூறியுள்ளார்.
    புதுடெல்லி:

    டெல்லியில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் தீர்மானங்கள் தாக்கல் செய்து முன்னாள் மத்திய மந்திரி ப. சிதம்பரம் பேசினார். அவர் பேசியதாவது:-

    பொருளாதாரத்தை கையாள தகுதியில்லாத நபர்களிடம் நாடு சிக்கி தவிக்கிறது. அதை காப்பாற்ற வேண்டிய கட்டாய நிலை வந்துள்ளது. பாரதிய ஜனதா வலுக்கட்டாய பொருளாதாரத்தை நம்பிக்கொண்டிருக்கிறது. அவர்கள் செயற்கையான தன்னிச்சையான கொள்கைகளை கடைபிடித்து வருகிறார்கள்.

    மோடியின் ஆட்சியில் நாட்டினுடைய பொருளாதாரம் படுபாதாளத்துக்கு சென்றுள்ளது. இன்னும் 12 மாதத்தில் வரக்கூடிய புதிய ஆட்சி இதையெல்லாம் எதிர்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறது.

    இந்த 4 ஆண்டுகளில் மோடி அரசு மக்களை முன்னேற்றுவதற்கு பதிலாக வறுமையில் தள்ளி இருக்கிறது. தற்போதுள்ள பிரச்சினைகளில் இருந்து நாட்டை காப்பாற்றுவதற்கு காங்கிரஸ் கட்சியால் மட்டும் தான் முடியும். நான் இதை அகங்காரத்துடனோ, அகந்தையுடனோ சொல்லவில்லை.

    நாங்கள் இதற்கு முன்பு செய்து காட்டியிருக்கிறோம். மீண்டும் வந்தால் அதை செய்வோம் என்பதற்காகத்தான் சொல்கிறேன். இப்போது அனைவரும் வங்கி நடவடிக்கைகளை கண்டு கவலை கொண்டு இருக்கிறோம்.

    கடந்த காலங்களில் நாங்கள் அளித்த வாக்குறுதிகளின்படி மோசமான வங்கிகடன் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டோம். 2008-2009-ம் நிதியாண்டில் மோசமாக இருந்த நிலைமையை சீர் செய்தோம். அப்போது சர்வதேச அளவில் பொருளாதார வீழ்ச்சி அடைந்தபோதும், அதிலிருந்து பாதுகாத்தோம். இதற்கு முன்பும் நாங்கள் செய்து காட்டியிருக்கிறோம், மீண்டும் அதை செய்வோம் என்றுதான் சொல்கிறோம்.

    நான் இங்கு பொருளாதார தீர்மானங்களை தாக்கல் செய்வதற்கோ, உங்கள் முன் பேசுவதற்கோ வராமல் இருக்கலாம் என நினைத்திருக்கலாம். இங்கு திரண்டிருக்கும் தொண்டர்கள் எனக்கு தைரியத்தையும், வலுவையும் தருகிறார்கள். 45 ஆண்டு காலம் காங்கிரசில் இருந்து வரும் நான் அதன்மூலம் ஒரு வலுவான மனிதனாக இருக்கிறேன்.

    மோடியின் ஆட்சி காலத்தை தொண்டர்கள் ஒரு கெட்ட கனவாக நினைக்க வேண்டும். நாம் நமது நண்பர்களுடன் சேர்ந்து 2019-ம் ஆண்டில் மீண்டும் ஆட்சிக்கு வருவோம். நாட்டை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்வோம்.

    இப்போது தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் நாட்டின் பிரச்சினைக்கு தீர்வு காண எந்த அம்சங்களும் இல்லை. எந்தவித வழிகாட்டுதலும் ஆதாரங்களும், உதவிகளும் இல்லாத பட்ஜெட்டாக அது இருக்கிறது.

    காங்கிரஸ் ஆட்சி காலங்களில் பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளத்தை ஏற்படுத்தினோம். காங்கிரஸ் கட்சி, அரசு எப்போதுமே எல்லா வி‌ஷயங்களிலும் சாதனைகளை செய்துள்ளது. மக்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு ஏழைகளின் முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.



    பாரதிய ஜனதா அரசின் பொருளாதார கொள்கையால் கடந்த 4 ஆண்டுகளில் விவசாயிகளின் வளர்ச்சியும், வருவாயும் தேக்க நிலையை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 2 இலக்குகள் முக்கியமானதாக உள்ளன. தனியார் தொழில் நிறுவனங்கள் மூலமும், அதே நேரத்தில் அரசு தொழில் நிறுவனம் மூலமும் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதுதான் அந்த இலக்குகள். இதன் மூலம் ஒரு பக்கம் போட்டி இருந்தாலும், சமூக நலனை பாதுகாக்கும் செயல்பாடுகளும் அதில் அடங்கி இருக்கும்.

    தற்போதைய அரசால் வங்கிகள் நிலைமை மோசமாக இருக்கிறது. பணமதிப்பிழிப்பு திட்டமும், ஜி.எஸ்.டி. வரியும், வேலை வாய்ப்புகளை தகர்த்துவிட்டன. நாம் ஆட்சியில் இருந்தபோது, தொலை தொடர்பு, நிலக்கரி, மின்சக்தி திட்டக்கொள்கைகள் போன்றவற்றை பரிகாசம் செய்தார்கள்.

    ஆனால் இன்று பாரதிய ஜனதா ஆட்சியில் தொலை தொடர்பு துறையும், மின்சக்தி துறையும் திவாலாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. 2013-14ம் நிதியாண்டில் வராக்கடன் நிலைமை 3 மடங்கு அதிகரித்துள்ளது.

    உயர்மட்ட அளவில் தொடர்புடைய பல முன்னணி தொழிலதிபர்கள் வங்கிகளில் ஏமாற்றி மோசடி செய்திருக்கிறார்கள். தோழமை முதலாளித்துவம் என்ற முத்திரையைத் தான் மோடி அரசு உருவாக்கி உள்ளது. இதன் மூலம் பொருளாதாரத்தை சீரழித்திருக்கிறார்கள்.

    காங்கிரஸ் கூட்டணி அரசின் 10 ஆண்டு காலத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட மோசமான கடன்களை விட கடந்த 3 ஆண்டு காலத்தில் 4 மடங்கு அதிக கடன்களை தள்ளுபடி செய்திருக்கிறார்கள்.

    இவ்வாறு ப. சிதம்பரம் பேசினார். #tamilnews
    Next Story
    ×