search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பத்ம விருதுகளுக்கு தமிழக அரசின் சிபாரிசு நிராகரிப்பு
    X

    பத்ம விருதுகளுக்கு தமிழக அரசின் சிபாரிசு நிராகரிப்பு

    ‘பத்ம’ விருதுகளுக்கு தமிழக அரசின் சிபாரிசுகள் நிராகரிக்கப்பட்டிருப்பது அம்பலத்துக்கு வந்து உள்ளது.
    புதுடெல்லி:

    மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகசேவை, அறிவியல், பொறியியல், பொது நிர்வாகம். குடியுரிமை பணி, வர்த்தகம், தொழில் துறைகளில் குறிப்பிடத்தக்க அளவில் சாதனை படைத்தவர்களுக்கு ‘பத்ம’ விருதுகளை வழங்கி கவுரவிக்கிறது.

    இந்த ஆண்டு 3 பேருக்கு பத்ம விபூஷண், 9 பேருக்கு பத்மபூஷண், 72 பேருக்கு பத்மஸ்ரீ என 84 பேருக்கு ‘பத்ம’ விருதுகள் வழங்கப்படும் என ஜனவரி 25-ந்தேதி அன்று மத்திய அரசு அறிவித்தது.

    அறிவிக்கப்பட்டவர்களுக்கு வரும் 20-ந்தேதி ஒரு பகுதியினருக்கும், அடுத்த மாதம் 2-ந்தேதி மற்றொரு பகுதியினருக்கும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பத்ம விருதுகளை வழங்குகிறார்.

    இந்த விருதுகளுக்காக 35 ஆயிரத்து 595 பரிந்துரைகள் போய் உள்ளன.

    அவற்றை மத்திய மந்திரிசபை செயலாளர் பி.கே. சின்கா, உள்துறை செயலாளர் ராஜீவ் காபா, பிரதமரின் கூடுதல் முதன்மைச்செயலாளர் பி.கே. மிஷ்ரா, முன்னாள் மத்திய மந்திரி ஆரிப் முகமது கான், சுவபன்தாஸ் குப்தா எம்.பி., முன்னாள் கிரிக்கெட் வீரர் அனில் கும்பிளே, பாரத ஸ்டேட் வங்கியின் முன்னாள் தலைவர் அருந்ததி பட்டாச்சாரியா, பாடகர் சேகர் சென், ஹரிவன்ஷ் ஆகியோரை கொண்ட பத்ம விருதுகள் தேர்வு குழு தேர்வு செய்தது.

    இருப்பினும் தமிழ்நாடு, அரியானா, காஷ்மீர், கர்நாடகம், உத்தரகாண்ட், பீகார், ராஜஸ்தான், டெல்லி ஆகிய 8 மாநில அரசுகள் சிபாரிசு செய்தவர்களில் ஒருவருக்கு கூட பத்ம விருது அறிவிக்கப்படவில்லை. அத்தனை சிபாரிசுகளும் முழுமையாக நிராகரிக்கப்பட்டு உள்ளன.

    தமிழ்நாட்டின் சார்பில் 6 பேருக்கு சிபாரிசு செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

    7 மாநில கவர்னர்களின் சிபாரிசுகளும் ஏற்கப்படவில்லை. அந்த கவர்னர்கள் கேசரிநாத் திரிபாதி (மேற்கு வங்காளம்), கேப்டன் சிங் சோலங்கி (அரியானா), என்.என். வோரா (காஷ்மீர்), ராம்நாயக் (உத்தரபிரதேசம்), ஓ.பி. கோலி (குஜராத்), பி. சதாசிவம் (கேரளா), கிரண் பெடி (புதுச்சேரி) ஆவார்கள்.

    மத்திய கேபினட் மந்திரிகளான அருண் ஜெட்லி, மேனகா காந்தி, பிரகாஷ் ஜவடேகர், ராம்விலாஸ் பஸ்வான், சுரேஷ் பிரபு, தவர்சந்த் கெல்லாட் மற்றும் ராஜாங்க மந்திரிகளான அர்ஜூன்ராம் மேக்வால், அஷ்வினி குமார் சவுபே, சி.ஆர். சவுத்ரி, ஹரிபாய் பார்த்திபாய் சவுத்ரி, கிரிராஜ் சிங், மகேஷ் சர்மா, முக்தர் அப்பாஸ் நக்வி, ராம்கிருபால் யாதவ் ஆகியோரின் சிபாரிசுகளையும் ‘பத்ம’ விருது தேர்வுக்குழு ஏற்காமல் நிராகரித்து விட்டது.

    பழங்குடியினர் நலத்துறை மந்திரி ஜூவல் ஓரம் 10 பேருக்கு சிபாரிசு செய்து இருந்தார். அதில் ஒருவருக்கு மட்டும் சிபாரிசு ஏற்கப்பட்டு உள்ளது. #tamilnews
    Next Story
    ×