search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இன்டிகோ நிறுவனத்தின் அனைத்து விமானங்களுக்கும் தடைவிதிக்க முடியாது- டெல்லி ஐகோர்ட்
    X

    இன்டிகோ நிறுவனத்தின் அனைத்து விமானங்களுக்கும் தடைவிதிக்க முடியாது- டெல்லி ஐகோர்ட்

    இன்டிகோ நிறுவனத்தின் அனைத்து A320 நியோ ரக விமானங்களுக்கு தடைவிதிக்க முடியாது என டெல்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. #indigo #goair
    புதுடெல்லி:

    உள்நாட்டு விமான போக்குவரத்தில் இன்டிகோ மற்றும் கோ ஏர் தனியார் விமான நிறுவனங்கள் பெரும் பங்கு வகிக்கிறது.

    இன்டிகோ நிறுவனத்திற்கு சொந்தமான விமானங்களின் என்ஜின்களில் அடிக்கடி கோளாறு ஏற்படுகிறது. மும்பையில் இருந்து உத்தரப்பிரதேசம் மாநில தலைநகரான லக்னோ நோக்கி கடந்த திங்கட் கிழமை 186 பயணிகளுடன் சென்ற ஏர் இன்டிகோவின் A320 ரக ஏர்பஸ் விமானம் நடுவானில் பழுதானது. இதையடுத்து விமானம் அகமதாபாத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

    இச்சம்பவத்தை தொடர்ந்து இவ்வகை என்ஜின்கள் பொருத்தப்பட்ட ஏர் இன்டிகோ நிறுவனத்துக்கு சொந்தமான 8 விமானங்கள் மற்றும் ஏர்கோ நிறுவனத்துக்கு சொந்தமான 3 விமானங்கள் என மொத்தம் 11 விமானங்களின் சேவைகளை உடனடியாக நிறுத்துமாறு உள்நாட்டு விமான போக்குவரத்து துறை இயக்குனரகம் கடந்த திங்கட் கிழமை உத்தரவு பிறப்பித்தது.

    இந்நிலையில், இன்டிகோ நிறுவனத்தின் அனைத்து 'A320 நியோ' ரக விமானங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என வழக்கறிஞர் யஷ்வந்த் ஷென்னாய் டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அவரது மனுவில், 'விமானங்களில் உள்ள கோளாறுகள் அனைத்தும் சரிசெய்யப்பட்டு, உள்நாட்டு விமான போக்குவரத்து துறை இயக்குனரகம் விமானங்களை இயக்க உத்தரவு பிறப்பிக்கும் வரை அனைத்து 'A320 நியோ' ரக விமானங்களுக்கு தடை விதிக்க வேண்டும்' என குறிப்பிடப்பட்டிருந்தது.

    அந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி கீதா மிட்டல் மற்றும் நீதிபதி சி.ஹரிசங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்டிகோ நிறுவனத்தின் அனைத்து 'A320 நியோ' ரக விமானங்களுக்கு தடை விதிக்க முடியாது என தெரிவித்துள்ளது.

    விமானங்களை இயக்குவது குறித்து மத்திய விமான போக்குவரத்து ஆணையம் எந்த முடிவும் எடுக்காததால் வருகிற 31-ந்தேதிவரை நாடு முழுவதும் 626 விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக இன்டிகோ மற்றும் கோ ஏர் நிறுவனங்கள் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. #indigo #goair #tamilnews

    Next Story
    ×