search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிறையில் சசிகலா சாதாரண உடை அணிந்திருந்ததாக மீண்டும் சர்ச்சை
    X

    சிறையில் சசிகலா சாதாரண உடை அணிந்திருந்ததாக மீண்டும் சர்ச்சை

    பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் தேசிய மகளிர் ஆணைய தலைவி ஆய்வு செய்தார். அப்போது, சாதாரண உடையில் சசிகலா இருந்ததாக மீண்டும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. #Sasikala #ParappanaAgrahara
    பெங்களூரு:

    பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் தேசிய மகளிர் ஆணைய தலைவி ஆய்வு செய்தார். அப்போது, சாதாரண உடையில் சசிகலா இருந்ததாக மீண்டும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

    சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். சிறையில் ரூ.2 கோடி லஞ்சமாக பெறப்பட்டு சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் செய்யப்பட்டு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இது தொடர்பாக கர்நாடக ஊழல் தடுப்பு படை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவி ரேகா சர்மா திடீரென பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்கு சென்று ஆய்வு செய்தார். அப்போது, பெண் கைதிகள் அடைக்கப்பட்டு இருக்கும் பகுதியில் சசிகலா, இளவரசி ஆகியோர் சிறை சீருடை அணியாமல் சாதாரண ஆடைகள் அணிந்திருந்ததை அவர் பார்த்து கோபம் அடைந்தார்.

    மேலும், ‘சசிகலா, இளவரசி ஆகியோர் சாதாரண ஆடைகள் அணிவதற்கு எப்படி அனுமதி வழங்கினீர்கள்?’ என்று அங்கு உள்ள சிறை அதிகாரிகளை கடிந்து கொண்டு கேட்டார்.

    அதைத்தொடர்ந்து ‘சாதாரண உடைகள் உங்களுக்கு எங்கிருந்து கிடைத்தது’ என்று ரேகா சர்மா, சசிகலாவிடம் கேட்டார். இந்த கேள்விக்கு பதில் அளிக்காமல் சசிகலா அமைதியாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் சசிகலா இருந்த சிறை அறைக்குள் சென்று ரேகா சோதனையிட்டார். அப்போது, ஒரு பையில் பல்வேறு வகையான வண்ண, வண்ண ஆடைகள் இருந்ததாக தெரிகிறது.

    பின்னர், சசிகலாவிடம் சுமார் 5 நிமிடங்கள் வரை ரேகா சர்மா பேசினார். அப்போது, அவர் சிறை நிலவரங்கள் பற்றி கேட்டறிந்தார். அதற்கு சசிகலா ஆங்கிலத்தில் பேசி பதில் அளித்தார். ‘அனைத்து வசதிகளும் நன்றாக உள்ளது. கம்ப்யூட்டர் மற்றும் கன்னடம் கற்றுக்கொள்கிறேன்’ என்று அவரிடம் கூறியதாக தெரிகிறது.

    இருப்பினும் ஆய்வின்போது சசிகலா சாதாரண உடையில் இருந்த சம்பவம் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    இதற்கிடையே, முதல்-மந்திரி சித்தராமையா துமகூரு நகரில் நிருபர்களிடம் கூறுகையில், “பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு சொகுசு வசதிகளை செய்து கொடுக்க மாட்டோம். அத்தகைய வேலையை நாங்கள் செய்ய மாட்டோம்” என்றார்.  #Sasikala #ParappanaAgrahara #tamilnews
    Next Story
    ×