search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    2019 பாராளுமன்ற தேர்தல்- கூட்டணி கட்சிகள் விலகுவதால் பா.ஜனதாவுக்கு சிக்கல்
    X

    2019 பாராளுமன்ற தேர்தல்- கூட்டணி கட்சிகள் விலகுவதால் பா.ஜனதாவுக்கு சிக்கல்

    2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கூட்டணி கட்சிகள் விலகிச் செல்வதால் பாரதிய ஜனதாவுக்கு பல்வேறு சிக்கல்கள் ஏற்படும் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்.
    புதுடெல்லி:

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் மோடியின் தனிப்பட்ட செல்வாக்கு, பாரதிய ஜனதா கட்சி அனைத்து மாநிலங்களில் அமைத்த வலுவான கூட்டணி ஆகிய காரணங்கள் தான் அந்த கட்சியின் அமோக வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது.

    ஆனால் தற்போது பாரதிய ஜனதா கூட்டணியில் உள்ள முக்கிய கட்சிகள் ஒவ்வொன்றாக விலகி வருகின்றன. இதனால் ஆட்சிக்கு ஆபத்து இல்லை என்றாலும், எதிர் வரும் காலங்களில் கட்சிக்கு பல்வேறு பின்னடைவுகளை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இன்னும் ஒரு ஆண்டில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. கூட்டணி கட்சிகள் விலகிச் செல்வதால் 2019 தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு பல்வேறு சிக்கல்கள் ஏற்படும் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்.

    தற்போது பாராளுமன்றத்தில் பாரதிய ஜனதாவுக்கு தனியாக 280 எம்.பி.க்கள் உள்ளனர். கூட்டணியின் முக்கிய கட்சியான சிவசேனாவுக்கு 18 உறுப்பினர்களும், தெலுங்கு தேசத்திற்கு 16 உறுப்பினர்களும், லோக் ஜனசக்தி கட்சிக்கு 6 உறுப்பினர்களும், அகாலி தளத்திற்கு 4 உறுப்பினர்களும், ராஷ்ட்ரிய லோக்சமதா கட்சிக்கு 3 உறுப்பினர்களும், அப்னாதளம் கட்சிக்கு 2 உறுப்பினர்களும், இதர கட்சிகளை சேர்ந்த 5 உறுப்பினர்கள் என  54 பேர் பாரதிய ஜனதா கூட்டணியில் உள்ளன.

    இதில் முக்கிய கட்சியான சிவசேனாவும், தெலுங்கு தேசமும் தற்போது கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளன. சிவசேனா கட்சி ஏற்கனவே வருகிற பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என்று அறிவித்து விட்டது.

    தற்போது மற்றொரு முன்னணி கட்சியான தெலுங்கு தேசமும் விலகி இருக்கிறது. அதன் 2 மத்திய மந்திரிகள் ராஜினாமா செய்துள்ளனர். பதிலுக்கு ஆந்திரா ஆட்சியில் இடம்பெற்றிருந்த 2 பா.ஜனதா மந்திரிகளும் ராஜினாமா செய்திருக்கிறார்கள்.

    பீகாரில் பாரதிய ஜனதா கூட்டணியில் இருந்த முன்னாள் முதல்-மந்திரி ஜிதன்ராம் மாஞ்சியின் இந்துஸ்தான் அவாமி மோர்ச்சா கட்சி ஏற்கனவே அந்த கூட்டணியில் இருந்து விலகி விட்டது. தற்போது அந்த கட்சி லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரிய ஜனதா தள கூட்டணியில் இணைந்துள்ளது.

    பாரதிய ஜனதாவின் இன்னொரு முக்கிய கட்சியான அகாலிதளமும் அதிருப்தியில் தான் இருக்கிறது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள அரியானா சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிடப்போவதாக ஏற்கனவே அகாலிதளம் அறிவித்துள்ளது.

    காஷ்மீர் மாநிலத்தில் ஆளும் கட்சியான மக்கள் ஜனநாயக கட்சி பாரதிய ஜனதா கூட்டணியில் உள்ளது. அந்த கட்சிக்கும் பாரதிய ஜனதாவின் நடவடிக்கைகள் பிடிக்கவில்லை. பா.ஜனதா எடுத்து வரும் இந்துத்வா நடவடிக்கையால் மக்கள் ஜனநாயக கட்சி அதிருப்தியில் உள்ளது. எனவே அந்த கட்சியும் பாரதிய ஜனதா கூட்டணியில் நீடிக்கும் என்று சொல்ல முடியாது.

    பா.ஜ.க. கூட்டணியில் உள்ள பெரிய கட்சிகள் பெரும்பாலும் விலகும் நிலையில் இருக்கின்றன. ஒன்றிரண்டு உதிரி கட்சிகள் மட்டுமே கூட்டணியை தொடரும் நிலையில் உள்ளன.


    எனவே பாராளுமன்ற தேர்தலில் கடந்த தேர்தலை போல வெற்றியை ஈட்டுவது கடினம் என்றே கூறப்படுகிறது. மராட்டிய மாநிலத்தை பொறுத்தவரை சிவசேனாவுடன் உள்ள கூட்டணி காரணமாத்தான் பாரதிய ஜனதாவுக்கு அதிக வெற்றி கிடைத்தது. சிவசேனா விலகுவதால் அங்கு பழைய மாதிரி வெற்றிபெற முடியாது.

    மேலும் சிவசேனா தனித்து போட்டியிட்டால் மராட்டியத்தில் 3 முனை போட்டி நிலவும். இது காங்கிரசுக்கு சாதகமாக அமைந்து அந்த கட்சி அதிக இடங்களில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு ஏற்படும்.

    ஆந்திராவில் பாரதிய ஜனதாவுக்கு பெரிய அளவில் செல்வாக்கு எதுவும் கிடையாது. தெலுங்கு தேசத்துடன் கூட்டணி அமைத்ததால் அந்த கட்சிக்கு வெற்றி கிடைத்தது. இப்போது அந்த கட்சி விலகுவதால் பா. ஜனதா வெற்றி பெறுவது கடினம்.

    உத்தரபிரதேசத்தில்தான் பா.ஜ.க. இமாலய வெற்றிகளை 2014 தேர்தலில் குவித்தது. 2019-ல் உத்தரபிரதேசத்தில் பா.ஜ.க. மீண்டும் வெற்றி பெற்று விடக்கூடாது என்பதில் முலாயம்சிங்கின் சமாஜ்வாதியும், மாயாவதியின் பகுஜன் சமாஜ்வாதியும் தீவிரமாக உள்ளன.

    கடந்த 25 ஆண்டுகளாக உத்தரபிரதேச அரசியலில் பரம எதிரிகளாக உள்ள இந்த இரு கட்சிகளும் பா.ஜ.க.வை எதிர்ப்பதற்காக ஒன்றாக கைகோர்த்து புதிய கூட்டணியை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன. அந்த இரு கட்சிகளும் ஒன்று சேர்ந்து போட்டியிட்டால் பா.ஜ.க. எளிதாக எந்த தொகுதியிலும் வெற்றி பெற இயலாது.

    பீகாரில் ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் மெகா கூட்டணி அமைத்துள்ளன. இந்த கட்சியில் ஜிதன்ராம்மாஞ்சி சேருவதால் பா. ஜனதாவுக்கு அங்கும் பின்னடைவு ஏற்படும். அகாலிதளம் விலகுவதால் பஞ்சாப்பிலும் பா. ஜனதா வெற்றியை ருசிக்க முடியாது. இதே நிலை தான் காஷ்மீரிலும் உள்ளது.

    கூட்டணியில் உள்ள பலம் வாய்ந்த கட்சிகள் விலகுவதால் பா. ஜனதா சொந்த பலத்தை வைத்தே 2019 பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய நிலை வரும்.

    கூட்டணி கட்சிகள் விலகுவது சம்பந்தமாக சிவசேனா தலைவர் சஞ்சய்ரவுத் கூறும்போது, 2014 பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி வைத்த எந்த கட்சிக்கும் உரிய மரியாதையை ஆட்சிக்கு வந்தபிறகு வழங்கவில்லை. அவர்கள் மற்ற கட்சிகளை அலட்சியப்படுத்துகிறார்கள். அதனால் தான் நாங்கள் வெளியேறும் முடிவுக்கு வந்தோம். இதே போல பல கட்சிகளும் வெளியேறும் நிலையில் இருக்கின்றன.

    பாரதிய ஜனதாவின் நடவடிக்கைகள் பிடிக்காததால் ஆரம்பத்தில் இருந்து எங்கள் கட்சி தலைவர் உத்தவ்தாக்கரே அதை எதிர்த்து வந்தார். இப்போது விலகும் முடிவை நாங்கள் எடுத்து இருக்கிறோம் என்று கூறினார். #Tamilnews
    Next Story
    ×