search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடன் வாங்கியவரின் பாஸ்போர்ட் விவரங்களை பெற வங்கிகளுக்கு மத்திய அரசு உத்தரவு
    X

    கடன் வாங்கியவரின் பாஸ்போர்ட் விவரங்களை பெற வங்கிகளுக்கு மத்திய அரசு உத்தரவு

    வெளிநாட்டுக்கு தப்பி ஓடுவதை தடுக்கும்வகையில், ரூ.50 கோடிக்கு மேல் கடன் வாங்கியவர்களின் பாஸ்போர்ட் விவரங்களை கேட்டுப்பெற வேண்டும் என்று பொதுத்துறை வங்கிகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. #Passport #Borrowers
    புதுடெல்லி:

    வெளிநாட்டுக்கு தப்பி ஓடுவதை தடுக்கும்வகையில், ரூ.50 கோடிக்கு மேல் கடன் வாங்கியவர்களின் பாஸ்போர்ட் விவரங்களை கேட்டுப்பெற வேண்டும் என்று பொதுத்துறை வங்கிகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 

    பொதுத்துறை வங்கிகளில் கடன் பெற்ற பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா, வைர வியாபாரிகள் நிரவ் மோடி, மெகுல் சோக்சி, ஜதின் மேத்தா ஆகியோர் அடுத்தடுத்து வெளிநாட்டுக்கு தப்பி ஓடி விட்டனர்.

    பாஸ்போர்ட் விவரங்களை கேட்டுப் பெறாததால், கடனாளிகள் தப்பிச் செல்வதை தடுக்க இயலாமல் போய்விடுவதாக கருதப்படுகிறது. இதற்கு முடிவு கட்டும்வகையில், பொதுத்துறை வங்கிகளுக்கு மத்திய நிதி அமைச்சகம் நேற்று அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

    அந்த உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    ரூ.50 கோடிக்கு மேல் கடன் பெற்ற அனைவரது பாஸ்போர்ட் விவரங்களையும் 45 நாட்களுக்குள் கேட்டுப்பெற வேண்டும். ஒருவேளை, அவர்களிடம் பாஸ்போர்ட் இல்லாவிட்டால், ‘பாஸ்போர்ட் இல்லை‘ என்று பிரகடனப்படுத்தும் சான்றிதழை கேட்டுப்பெற வேண்டும்.

    பாஸ்போர்ட் விவரங்களை குறிப்பிடுவதற்காக, கடன் விண்ணப்ப படிவத்தில் அதற்கென பிரத்யேக பகுதியை அச்சிட வேண்டும். பாஸ்போர்ட் விவரங்களை பெற்றால்தான், உரிய அதிகாரிகளிடம் சொல்லி, அந்த கடனாளிகள் வெளிநாடு தப்பிச் செல்வதை தடுக்க முடியும்.

    இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

    கடன் வாங்கிவிட்டு, திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டுக்கு தப்பி ஓடுபவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்து விற்பதற்கான மசோதாவுக்கு கடந்த வாரம் மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.

    மேலும், ரூ.50 கோடிக்கு மேல் உள்ள வாராக்கடன்களை ஆய்வு செய்யுமாறும், அதில் மோசடி இருப்பது தெரிய வந்தால், சி.பி.ஐ.யிடம் புகார் கூறுமாறும் பொதுத்துறை வங்கிகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டு இருந்தது.

    இந்த நடவடிக்கைகளை தொடர்ந்து, ரூ.50 கோடிக்கு மேல் கடன் வாங்கியவர்களின் பாஸ்போர்ட் விவரங்களை பெற உத்தரவிட்டுள்ளது.  #Passport #Borrowers #tamilnews 
    Next Story
    ×