search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்ற தேர்தலில் விவசாயிகளை தங்கள் பக்கம் இழுக்க பாஜக தீவிரம்
    X

    பாராளுமன்ற தேர்தலில் விவசாயிகளை தங்கள் பக்கம் இழுக்க பாஜக தீவிரம்

    விவசாயிகள் கைகொடுத்தால் வெற்றி பெற முடியும் என்பதால் வங்கிகள் மூலம் அதிக கடன் கொடுத்து விவசாயிகளை தங்கள் பக்கம் இழுக்க பாரதிய ஜனதா திட்டம் தீட்டியுள்ளது.
    புதுடெல்லி:

    சமீபகாலங்களில் பல மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தல், உள்ளாட்சி தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்களில் கிராம பகுதிகளில் பாரதிய ஜனதா பின்னடைவை சந்தித்து இருப்பதை பார்க்க முடிந்தது.

    பிரதமரின் சொந்த மாநிலமாகவும், பாரதிய ஜனதா மிகவும் செல்வாக்கு பெற்ற மாநிலமாகவும் உள்ள குஜராத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா ஆட்சியை பிடித்தாலும் கூட அங்கும் கிராமப்பகுதிகளில் பெரும் பின்னடைவை சந்தித்து இருந்தது. விவசாயிகள் அதிருப்தியில் இருப்பதால் தான் கிராமப்பகுதி ஓட்டு பாரதிய ஜனதாவுக்கு குறைந்ததாக கருதப்படுகிறது.

    உத்தரபிரதேசம், மராட்டியம், குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநிலங்களில் விவசாயிகள் தங்கள் பிரச்சினைகளுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

    எனவே விவசாயிகளை தங்கள் பக்கம் இழுக்கும் வகையில் பாரதிய ஜனதா தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. விரைவில் 8 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

    இந்த தேர்தல்களில் விவசாயிகள் கைகொடுத்தால் தான் வெற்றிபெற முடியும் என்று பாரதிய ஜனதா நம்புகிறது. எனவே தான் மத்திய பட்ஜெட்டில் விவசாயிகளுக்காக ஏராளமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.

    பொதுவாக கிராமப்புற முன்னேற்றத்திற்காக பல லட்சம் கோடி அளவுக்கு பட்ஜெட்டில் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. விவசாயத்துறைக்கு மட்டும் கடந்த ஆண்டை விட 13 சதவீதம் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்து மொத்தம் ரூ.58 ஆயிரத்து 80 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

    இதுமட்டுமல்லாமல் விவசாயிகள் உற்பத்தி உணவு தானியங்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை அதிக அளவில் உயர்த்தப்பட்டுள்ளது. 2022-ம் ஆண்டுக்குள் விவசாயிகள் வருமானத்தை 2 மடங்காக உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இத்துடன் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வந்த ரூ.1 லட்சம் கோடி கடனை ரூ.11 லட்சம் கோடியாக அதிகரிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி விவசாயிகள் கடன்களை வங்கிகள் அதிகரித்து வழங்க மத்திய மந்திரி அருண்ஜெட்லி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

    தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி (நபார்டு வங்கி) வருடாந்திர கூட்டம் டெல்லியில் நடந்தது. அதில் கலந்து கொண்டு பேசிய மத்திய மந்திரி அருண்ஜெட்லி விவசாயிகளுக்கு வழங்கப்படும் கடன்களை பல மடங்கு அதிகரித்து வழங்க வங்கிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ரூ.11 லட்சம் கோடி கடன் வழங்குவதற்கு இந்த பட்ஜெட்டில் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. அந்த இலக்கை அடைவதற்கு அனைத்து வங்கிகளும் உதவ வேண்டும். வங்கிகள் மட்டுமல்லாமல் அதனுடன் சார்ந்த அமைப்புகளும் ஒன்று சேர்ந்து நின்று விவசாயிகளின் வருமானத்தை 2 மடங்கு அதிகரிக்கும் வகையில் பணியாற்ற வேண்டும். விவசாயம் தொடர்பான வங்கி உதவிகளுக்கான முதலீடுகளை மேம்படுத்த வேண்டும் என்று கூறினார்.

    இதேபோல மத்திய நிதிச்சேவை செயலாளர் ராஜீவ்குமார் வங்கிகளுக்கு வழங்கியுள்ள உத்தரவில், புவியியல் ரீதியாக கீழ்நிலையில் உள்ள பகுதிகளை கண்டறிந்து அங்கு அதிக கடன்களை வழங்கி முன்னேற்றச் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். குறிப்பாக வடகிழக்கு மாநிலங்கள், கிழக்கு மாநிலங்கள், மத்திய மாநிலங்களில் போன்றவற்றில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
    Next Story
    ×