search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் நிரவ் மோடி மேலும் ரூ.1,300 கோடி மோசடி
    X

    பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் நிரவ் மோடி மேலும் ரூ.1,300 கோடி மோசடி

    பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் நிரவ்மோடி மேலும் ரூ.1,300 கோடி மோசடி செய்தது தற்போது தெரிய வந்துள்ளது. நிரவ்மோடியின் வெளிநாட்டு சொத்துக்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.
    மும்பை:

    நாட்டின் 2-வது பெரிய வங்கியான பஞ்சாப் நே‌ஷனல் வங்கியின் மும்பை பிராடி ஹவுஸ் கிளையில் ரூ.11,300 கோடி மோசடி நடந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த மோசடியில் தொடர்புடைய பிரபல வைர வியாபாரி நிரவ்மோடி, அவரது மனைவி அமி, சகோதரர் நிஷால், அவரது மாமா மெகுல் சோக்ஷி ஆகியோர் வெளிநாடு தப்பி விட்டனர்.

    நிரவ்மோடியின் கீதாஞ்சலி குரூப் கம்பெனிகள் செய்த இந்த வங்கி கடன் மோசடி தொடர்பாக சி.பி.ஐ., அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அதோடு நாடு முழுவதும் அதிரடியாக சோதனை நடத்தப்பட்டது. அவர்களது அனைத்து சொத்துகளும் முடக்கப்பட்டது. இதே போல வங்கி கணக்குகளையும் வருமான வரித்துறையினர் முடக்கினர்.

    மேலும் சொகுசு கார்கள், இறக்குமதி செய்யப்பட்ட கடிகாரங்கள் உள்ளிட்ட பல வகையான விலை உயர்ந்த பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    போலி உத்தரவாதம் கடிதம் மூலம் இந்த மோசடி நடந்தது தெரிய வந்தது. அந்த வங்கியின் மும்பை கிளை அளித்த உத்தரவாதம் மூலம்தான் கடன் அளிக்கப்பட்டது.

    இதனால் இந்த மோசடியில் வங்கி அதிகாரிகளுக்கு தொடர்பு இருந்தது தெரிய வந்தது. இதை தொடர்ந்து 6 வங்கி அதிகாரிகள் உள்பட 14 பேரை சி.பி.ஐ. இதுவரை கைது செய்து உள்ளது.

    மேலும் அந்த வங்கியின் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான சுனில்மேத்தா, செயல் இயக்குனர் பிராம்ஜ்ராவ் ஆகியோரிடம் சி.பி.ஐ. சமீபத்தில் விசாரணை நடத்தியது.

    இந்த நிலையில் பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் நிரவ்மோடி மேலும் ரூ.1,300 கோடி மோசடி செய்தது தற்போது தெரிய வந்துள்ளது.



    அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனை மூலம் நிரவ் மோடி, மெகுல் சோக்ஷி கூடுதலாக ரூ.1,322 கோடி மோசடி செய்துள்ளனர். இந்த தகவலை பஞ்சாப் நே‌ஷனல் வங்கி தான் வெளியிட்டுள்ள காலாண்டுக்கான பங்கு சந்தை குறித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதன் முலம் நிரவ் மோசடி இதுவரை மொத்தம் ரூ.12,622 கோடி மோசடி செய்து உள்ளார்.

    இதற்கிடயே நிரவ்மோடியின் வெளிநாட்டு சொத்துக்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கையிலும் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. அவரது வெளிநாட்டு வர்த்தக தொடர்புகள், சொத்துக்கள் ஆகியவை குறித்து 6 நாடுகளிடம் தகவல் கோரி அமலாக்கத்துறை மும்பை சிறப்பு கோர்ட்டில் மனுதாக்கல் செய்தது. இந்த மனுவை கோர்ட்டு ஏற்றுக் கொண்டது.

    அமெரிக்கா, இங்கிலாந்து, ஆங்காங், தென்ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சிங்கப்பூர் ஆகிய 6 நாடுகளில் நிரவ்மோடிக்கு சொத்துக்கள் உள்ளன. இந்த நாடுகளில் அவர் வைர உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனங்களை நடத்தி வருகிறார்.

    இதற்கிடையே பஞ்சாப் நே‌ஷனல் வங்கி சார்பில் நிரவ் மோடிக்கு வழங்கப்பட்ட கடன் குறித்த தகவல்களை 5 இந்திய வங்கிகளின் வெளிநாட்டு கிளைகளிடம் இருந்து பெற்று தருமாறு அந்த வங்கிகளின் ஊழல் கண்காணிப்பு அலுவலர்களுக்கு சி.பி.ஐ. கடிதம் எழுதியுள்ளது.

    கனரா வங்கி, பேங்க் ஆப் இந்தியா, பாரத ஸ்டேட் வங்கி, அலகாபாத் வங்கி, ஆக்சிஸ் வங்கி ஆகிய வங்கிகளிடம் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    வங்கிகளில் கடன் பெற்று திருப்பி செலுத்தாமல் செய்து வரும் மோசடி அதிகரித்து வருகிறது. வங்கி துறைகளில் நடக்கும் மோசடி ரூ.20 ஆயிரம் கோடிக்கு மேல் தாண்டி விட்டது. #tamilnews
    Next Story
    ×