search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழ்நாடு பார்கவுன்சில் தேர்தலில் போட்டியிட நிபந்தனைகள்: ஐகோர்ட்டு உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை
    X

    தமிழ்நாடு பார்கவுன்சில் தேர்தலில் போட்டியிட நிபந்தனைகள்: ஐகோர்ட்டு உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை

    தமிழ்நாடு பார்கவுன்சில் தேர்தலில் போட்டியிடுவோருக்கு பல்வேறு நிபந்தனைகளை விதித்து சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று தடைவிதித்தது. #BarCouncilElection #SupremCourt #HighCourt
    புதுடெல்லி:

    தமிழ்நாடு பார்கவுன்சில் தேர்தலில் போட்டியிடுவோருக்கு பல்வேறு நிபந்தனைகளை விதித்து சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று தடைவிதித்தது.

    தமிழ்நாடு பார் கவுன்சிலுக்கு வருகிற மார்ச் 28-ந் தேதி நடைபெறும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் தகுதிகளை நிர்ணயித்து புதிய கட்டுப்பாடுகளை கொண்ட விதிகளை பார் கவுன்சிலை நிர்வாகித்து வரும் சிறப்புக்குழு வெளியிட்டது.

    இதுகுறித்து ஐகோர்ட்டின் மதுரை கிளையில், வக்கீல்கள் சிலர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை நீதிபதிகள் என்.கிருபாகரன், ஆர்.தாரணி ஆகியோர் விசாரித்தனர்.

    இந்த வழக்கின் தீர்ப்பை சென்னை ஐகோர்ட்டில் கடந்த 16-ந் தேதி வழங்கிய நீதிபதிகள், பார் கவுன்சில் தேர்தலில் பண பட்டுவாடாவை தடுக்க வருமான வரி சோதனைக்கு அனுமதி வழங்கியதோடு, போட்டியிடுவோருக்கு பல்வேறு நிபந்தனைகளை விதித்து உத்தரவிட்டனர்.

    தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், அவர்கள் ஆஜராகி வாதிட்ட வழக்குகளில், குறைந்தது 10 வழக்குகளாவது சட்ட இதழ்களில் வெளியாகி உள்ளது என்பதை உறுதி செய்ய வேண்டும். ஆண்டுக்கு 5 வழக்குகள் வீதம், 5 ஆண்டுகளில் குறைந்தது 25 வழக்குகளை நடத்தியிருக்க வேண்டும். வேட்பாளரின் சொத்து கணக்கு, வங்கி இருப்பு, குடும்ப உறுப்பினர்களின் வருமானம் உள்ளிட்ட விவரங்களையும், குற்ற வழக்கில் சம்பந்தப்பட்டிருந்தால் அதன் விவரங்களையும் தாக்கல் செய்யவேண்டும். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர் உள்ளிட்ட விவரங்களை, தமிழக டி.ஜி.பி.க்கு அனுப்பி வைக்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை விதித்து இருந்தனர்.

    ஐகோர்ட்டின் இந்த உத்தரவை எதிர்த்து வக்கீல் சந்திரமோகன் உள்ளிட்ட 742 பேர் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தனர்.

    அந்த மனுவில், “பார்கவுன்சில் தேர்தல் விவகாரத்தில் தமிழகத்திற்கு என தனி விதியை பின்பற்றாமல் இந்திய அளவிலான ஒரே நடைமுறை விதியை கடைப்பிடிக்க வேண்டும். மேலும் பார்கவுன்சில் தேர்தலில் திறந்தநிலை பல்கலைக்கழகம் மூலம் பயின்ற வழக்கறிஞர்களும் தேர்தலில் போட்டியிட மற்றும் வாக்களிக்க அனுமதியளித்து உத்தரவிட வேண்டும். மேலும் நீதிபதி கிருபாகரன் அமர்வு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்” என்று கூறப்பட்டு இருந்தது.

    இந்த மனு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணை தொடங்கியதும் நீதிபதிகள், பார்கவுன்சில் தேர்தலில் போட்டியிடுவோருக்கு பல்வேறு நிபந்தனைகளை விதித்து சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்தனர்.

    மேலும், பார்கவுன்சில் தேர்தலில் போட்டியிடும் வழக்கறிஞர்கள் மீது குற்ற வழக்குகள் இருந்தால் அவற்றை வேட்புமனுவில் அவர்கள் தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.   #BarCouncilElection #SupremCourt #HighCourt #tamilnews
    Next Story
    ×