search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போலீஸ் தடியடியில் படுகாயம் அடைந்த இளைஞர் காங்கிரஸ் செயலாளர் சதீஷ்.
    X
    போலீஸ் தடியடியில் படுகாயம் அடைந்த இளைஞர் காங்கிரஸ் செயலாளர் சதீஷ்.

    கேரளாவில் தொண்டர் படுகொலையை கண்டித்து போராட்டம் - காங்கிரசார் மீது போலீஸ் தடியடி

    கேரளாவில் தொண்டர் படுகொலையை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரசார் மீது போலீசார் தடியடி நடத்தியதில் 20 பேர் படுகாயம் அடைந்தனர்.
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் கம்யூனிஸ்டு கட்சி ஆட்சி அமைந்த பிறகு அங்கு அரசியல் மோதல்கள் அதிகரித்துள்ளது.

    கம்யூனிஸ்டு மற்றும் காங்கிரஸ், பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் பல்வேறு இடங்களில் மோதலில் ஈடுபட்டு வருகிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு கண்ணூர் பகுதியில் காங்கிரஸ் இளைஞரணி பொறுப்பாளர் சுகைல் என்பவர் வெடிகுண்டு வீசி படுகொலை செய்யப்பட்டார்.

    இதை கண்டித்து காங்கிரசார் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த 2 பேர் இந்த கொலை தொடர்பாக கோர்ட்டில் சரணடைந்தனர். ஆனால் அவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல என்று காங்கிரஸ் கூறி உள்ளது. உண்மை குற்றவாளிகளை கைது செய்யக்கோரி தங்கள் போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளது.

    திருவனந்தபுரத்தில் உள்ள கேரள அரசு தலைமை செயலகம் முன்பு காங்கிரசார் தொடர் உண்ணாவிரத போராட்டமும் நடத்தி வருகிறார்கள். மேலும் நேற்று இளைஞர் காங்கிரஸ் சார்பில் தலைமை செயலகம் நோக்கி பேரணியும் நடந்தது.

    பேரணியை போலீசார் தடுத்து நிறுத்தியபோது காங்கிரசாருக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. போலீசார் மீது கற்களும் வீசப்பட்டது. இதைதொடர்ந்து போலீசார் காங்கிரசார் மீது தடியடி நடத்தினார்கள்.

    மேலும் உண்ணாவிரத பந்தலுக்குள் புகுந்தும் தடியடி நடத்தப்பட்டது. இதில் திருவனந்தபுரம் மாவட்ட காங்கிரஸ் இளைஞரணி செயலாளர் சதீஷ் உள்பட 20 தொண்டர்கள் படுகாயம் அடைந்தனர். 2 போலீசாரும் கல்வீச்சில் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    காங்கிரஸ் தொண்டர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதற்கு எதிர்கட்சி தலைவரான ரமேஷ்சென்னிதலா கண்டனம் தெரிவித்துள்ளார். ‘எங்கள் கட்சி தொண்டர் படுகொலையில் உண்மை குற்றவாளிகளை கைது செய்யக்கோரி போராட்டம் நடத்திய காங்கிரசார் மீது போலீசார் தடியடி நடத்தி உள்ளது கடும் கண்டனத்திற்குறியது. இந்த கொலைவெறி தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று அவர் கூறி உள்ளார்.


    Next Story
    ×