search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியாவின் முதல் பெண்கள் ரெயில் நிலையமானது ஜெய்ப்பூர் காந்தி நகர் ரெயில் நிலையம்
    X

    இந்தியாவின் முதல் பெண்கள் ரெயில் நிலையமானது ஜெய்ப்பூர் காந்தி நகர் ரெயில் நிலையம்

    ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூரில் உள்ள காந்தி நகர் ரெயில் நிலையம் முழுவதும் பெண்களால் நிர்வகிக்கப்பட்டு வரும் முதல் ரெயில் நிலையம் என்ற பெருமையை பெற்றுள்ளது.
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூரில் உள்ள காந்தி நகர் ரெயில் நிலையம் முழுவதும் பெண்களால் நிர்வகிக்கப்பட்டு வரும் முதல் ரெயில் நிலையம் என்ற பெருமையை பெற்றுள்ளது.

    ராஜஸ்தான் மாநிலத்தில் முதல் மந்திரி வசுந்தரா ராஜே தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தின் தலைநகரான ஜெய்ப்பூரில் அமைந்துள்ளது காந்தி நகர் ரெயில் நிலையம்.



    தற்போது, இந்த ரெயில் நிலையத்தில் கண்காணிப்பாளர், டிக்கெட் பரிசோதகர், ரெயில் நிலைய பெண் கான்ஸ்டபிள், ரெயில் நிலைய தலைவர் (ஸ்டேஷன் மாஸ்டர்), டிக்கெட் முன்பதிவு கிளார்க், பொறியாளர், டிக்கெட் வழங்குபவர், ரயில்வே பாதுகாப்பு படை உள்பட 32 பதவிகளுக்கு பெண் ஊழியர்களாக இருக்கின்றனர்.

    இந்நிலையில், காந்தி நகர் ரெயில் நிலையம் முற்றிலும் பெண் ஊழியர்களைக் கொண்டு இயங்கி வருவதால் இந்தியாவின் முதல் பெண் ரெயில் நிலையம் என்ற பெருமையை பெற்றுள்ளது.



    இதுதொடர்பாக வடமேற்கு ரெயில்வே அதிகாரிகள் கூறுகையில், ஜெய்ப்பூர் - டெல்லி மார்க்கத்தில் அமைந்துள்ள காந்தி நகர் ரெயில் நிலையம் வழியாக தினமும் 50-க்கு மேற்பட்ட ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் 25 ரெயில்கள் இந்த நிலையத்தில் நின்று செல்கின்றன.

    இந்த பகுதியில் கல்லுாரிகள், அலுவலகங்கள் இருப்பதால் இந்த ரெயில் நிலையத்திற்கு அதிகளவில் பெண்கள் வருகின்றனர். தினமும், 7,000 பயணியர் இந்த ரெயில் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

    இதுகுறித்து வடமேற்கு மண்டல ரெயில்வே மேலாளர் டி.பி.சிங் கூறுகையில், இந்தியாவிலேயே பெண்கள் மட்டுமே நிர்வாகம் செய்யும் முதல் ரெயில் நிலையம் இது என்பதில் பெருமை கொள்கிறேன். ஆண்களுக்கு நிகராக பெண்களும் அனைத்து துறைகளிலும் சாதித்துக் காட்டமுடியும் என்பதற்கு இது ஓர் சிறந்த உதாரணம்.
     
    இதற்கு முன்னதாக மும்பையின் மட்டுங்கா ரெயில் நிலையத்திலும் பெண்கள் மட்டுமே நிர்வாகம் செய்து வருகின்றனர். ஆனால் அது முக்கிய வழித்தடம் அல்ல. புறநகர் பகுதியில் உள்ள ரெயில் நிலையத்தின் துணை வழித்தடம் தான் என தெரிவித்தார்.

    வாரம் முழுவதும், 24 மணி நேரமும் இயங்கும் இந்த ரயில் நிலையத்தில், கண்காணிப்பு கேமராக்கள், சானிட்டரி நாப்கின் வழங்கும் இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×